ETV Bharat / state

நீலகிரி அருகே படுகர் இனமக்களை ஆதிவாசிப்பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Aug 7, 2022, 7:55 PM IST

படுகர் இன மக்களை ஆதிவாசிப்பட்டியலில் சேர்க்கவேண்டும்; தேயிலை விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி அருகே நாக்குபெட்டா விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

நீலகிரி: கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் பச்சை தேயிலை குறைந்தபட்சம் ரூ.30 என விலை நிர்ணய செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.7) ஆர்ப்பாட்டம் நடந்தது.

குறிப்பாக, படுகர் இன மக்களை ஆதிவாசிப்பட்டியலில் சேர்க்க வேண்டும்; விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களா காட்டேஜ் கட்டுவதைத்தடுக்க வேண்டும்; தேயிலை விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மேலும், கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, ரூ.7 மட்டுமே விலை கிடைக்கிறது. இந்த கூலியானது தேயிலைத்தோட்டங்களைப் பராமரிக்கவே போதுமானதாக இல்லாததால், குடும்பச்செலவுக்கு விவசாயிகள் திணறி வருகின்றனர். பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்க வேண்டும் என்றும்; மேலும், தேயிலை வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரசு தேயிலை ஏல மையத்தில் குறைந்தபட்சம், தேயிலையினை ரூ.150-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டுமென வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும். கோத்தகிரியில் விவசாயிகள், பொதுமக்களின் நலன்கருதி உழவர் சந்தை விரைந்து அமைக்க வேண்டும் என்றும்; மேலும், விவசாயப்பயிர்களை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஊர் தலைவர் பில்லன், ஊர் நிர்வாகி ஆலாகவுடர், ராஜு, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: டிஏபி உரத்திற்கு மாற்றாக பாஸ்பேட் உரங்களை பயன்படுத்துங்கள் – விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.