ETV Bharat / state

தொடரும் வாகன விபத்து... 13வது கொண்டை ஊசி வளைவில் நடப்பது என்ன?.. அமானுஷ்யமா? ஓட்டுநரின் அலட்சியமா?..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 8:50 PM IST

13th Hair Pin Bend: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டு வரும் தொடர் பேருந்து விபத்தால் ஓட்டுநர்களும், மக்களும் பெரும் குழப்பத்திற்கும், பயத்திற்கும் ஆளாகி உள்ளனர். இது குறித்து விரிவாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு...

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் பேருந்து விபத்துக்கள்
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் பேருந்து விபத்துக்கள்

Coonoor 13 hairpin bend Horror story

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பிரதான சாலையாக விளங்கி வருவது குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட மக்களுக்கு அன்றாட பொருட்களான பால் முதல் பெட்ரோல் வரை, இந்த சாலை வழியாகத்தான் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இச்சாலையையே பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே போன்று, சமவெளி பகுதிகளான கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு நீலகிரி மக்கள் இவ்வாழியாகவே செல்கின்றனர். இதனாலே இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக காணப்படுகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையில் உள்ள 13வது கொண்டை ஊசி வளைவை அடுத்து, மரப்பாலம் தர்கா அமைந்திருந்தது. 1993ஆம் ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக, தர்காவில் இருந்த நான்கு பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வரை பேருந்தில் பயணித்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன்பின், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெய்த பலத்த மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், குறும்பாடி பகுதியில் இருந்த தனியார் ஓட்டலின் நீச்சல் குளம் அடித்துச் செல்லப்பட்டது. 13வது கொண்டை ஊசி வளைவின் கீழ் டீக் கடை நடத்தி வந்தவர், மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.

மேலும் சாலைகள் துண்டிப்பு ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வந்து செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டது. 2009 ஆம் ஆண்டு பேருந்து விபத்துக்குப் பிறகு, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் 13வது கொண்டை ஊசி வளைவைக் கடந்து செல்லும் பேருந்துகள், கடந்த ஒரு மாதமாக விபத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

இதில், அண்மையில் தென்காசி கனையம் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து விபத்துக்கு உள்ளாகி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தப் பேருந்து விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, இப்பகுதியில் அமானுஷ்ய சக்திகள் உள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில், மீண்டும் மலைப்பாதையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 22 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

மலைப்பாதையில் பர்லியார் பகுதியில் வந்து கொண்டிருந்த பேருந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது ஏறி இறங்கியதில் இருவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மலைப் பாதையில் சென்று இறங்கிய பேருந்து, கல்லார் பகுதியில் வந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த ஒரு மாதத்தில் தொடரும் பேருந்து விபத்துகளால் மீண்டும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதா? இதற்கு பின் அமானுஷ்ய சக்திகள் இருக்கக்கூடுமா? உள்ளிட்ட கேள்விகளும், சந்தேகங்களும் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து வாகன பழுது பார்ப்போர் சங்கத்தைச் சார்ந்த குமார் கூறுகையில், "வாகனம் முறையாக இயக்கப்படாததே இதற்கு காரணம். மலைப் பாதையில் பேருந்துகள் கீழிறங்கும் போது இரண்டாவது கியரில் வாகனத்தை இயக்கிச் செல்ல வேண்டும். பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிச் சென்றால் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

மலைப்பாதையில் வாகனம் இயக்கும் போது சமவெளி ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு வழங்க வேண்டும். 8 முதல் 10 கிலோ மீட்டர் கீழ் நோக்கி செல்லும் பேருந்துகளை நிறுத்தி, ஓட்டுநர்கள் சோதனை மேற்கொள்ள வேண்டும். பேருந்து விபத்தில் உயிர் இழந்தவர்கள், அவர்களது ஆயுள் காலம் முடிவதற்குள் இறந்து இருக்கலாம். நிறைவேறாத ஆசைகளால் அவர்கள் ஆன்மா சாந்தியடையாமல் இருக்கலாம்.

அதற்காகத் தான், மும்மத பிரார்த்தனையை கடந்த சில தினங்களுக்கு முன் குன்னூரில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்தினர். இந்தப் பிரார்த்தனைகளுக்கு அமானுஷ்ய சக்திகள் அடிபணிய வேண்டும். மீண்டும் இந்த இடங்களில் பேருந்து விபத்துகள் நடைபெறாமல் இருக்க கடவுளின் நற்செயல்கள் நடைபெற வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுதலாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆயுத பூஜை வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் சம்பவம்: வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை - ஆவடி காவல் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.