ETV Bharat / state

விஜேயேந்திரதீர்த்த சுவாமிகளின் 408-ஆவது ஆராதனை விழா; திருப்பதியிலிருந்து வந்தடைந்த வஸ்திரம்

author img

By

Published : Jun 27, 2022, 10:09 AM IST

கும்பகோணம் அருகே மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகளின் பரமகுருவான, விஜேயேந்திரதீர்த்த சுவாமிகளின் 408-ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியின் குடையுடன் வஸ்திர சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வஸ்திர சமர்ப்பணம்
வஸ்திர சமர்ப்பணம்

தஞ்சாவூர்: மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகளின் பரமகுருவான, விஜேயேந்திரதீர்த்த சுவாமிகளின் 408-ஆவது ஆராதனை விழா கும்பகோணத்தில் உள்ள அவரது திருமடத்தில் மந்திராலய மடாதிபதி சுபேதேந்திரதீர்த்த சுவாமிகளின் தலைமையில் நேற்று (ஜூன்26) ஆனி மாத த்ரயோதசியை முன்னிட்டு, சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வரலாற்றின் முதன்முறையாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியின் குடையுடன் வஸ்திர சமர்ப்பணம் நிகழ்ச்சி திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையில், அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரமகுருவான, விஜயேந்திரதீர்த்த சுவாமிகளின் 408வது ஆண்டு ஆராதனை மகா உற்சவம், கடந்த 23ஆம் தேதி இரவு, ஆனி மாத தசமி தினத்தில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயேந்திரதீர்த்த சுவாமிகள் மடத்தில், விசேஷ தன தான்ய பூஜைகளுடன், கோ பூஜை மற்றும் கஜ பூஜை, அனுமன் திருக்கொடி பிரதட்சனம் ஆகியவற்றுடன் தொடங்கியது.

கும்பகோணத்தில் விஜேயேந்திரதீர்த்த சுவாமிகளின் 408-ஆவது ஆராதனை விழா

தொடர்ந்து இதில் முக்கிய அம்சமாக, மடத்தின் வரலாற்றில் முதன்முறையாக, விஜயேந்திரதீர்த்த சுவாமிகளுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சார்பில், செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையிலும், அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி முன்னிலையிலும், மங்கள வாத்தியங்கள் முழங்க, பட்டு வஸ்திர மற்றும் குடை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூல பிருந்தாவன ரூபியாக அருள்பாலிக்கும் விஜயேந்திரசுவாமிகளுக்கு சமர்பிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது,.

இதன் தொடர்ச்சியாக, விஜயேந்திரதீர்த்த சுவாமிகளின் மூல பிருந்தாவனத்திற்கு பால் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகமும், கனகாபிஷேகமம், துளசி அர்ச்சனையும், மூலராமர் பூஜையும் நடைபெற்ற பிறகு, நண்பகல் மகா மங்கல ஆர்த்தி நடைபெற்றது பின்னர் இரவு மடத்தின் கஷ்யப்ப தீர்த்தத்தில் லட்சுமி நாராயணசுவாமி தெப்போற்சவம் நடைபெறுகிறது.

இன்று 27ம் தேதி திங்கட்கிழமை உத்தர ஆராதனையும், 28ம் தேதி செவ்வாய்கிழமை சர்வ அமாவாசை தினத்தில் ஸ்ரீ நாராயண பூதராஜர் பூஜையுடன் இவ்வாண்டிற்கான ஆராதனை விழா இனிதே நிறைவு பெறுகிறது. இந்த ஆராதனை நிகழ்வில், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி, மந்திராலாய மகான் ராகவேந்திரசுவாமிகளின் பரமகுருவான விஜயேந்திரதீர்த்த சுவாமிகளின் ஆராதனை விழா நிகழ்வின் போது, திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியின் வஸ்திர பிரசாதம், அவருடைய ஆசிர்வாதத்துடன் நேரில் கொண்டு வந்து வழங்கியது மிகவும் மகிழ்ச்சி. இதனை பூர்வஜென்ம புண்ணியமாக கருதுகிறேன். இந்நிகழ்வில் பங்கேற்க குடும்பத்துடன் வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

பிறகு பேசிய மந்திராலய மடாதிபதி சுபதேந்திரதீர்த்த சுவாமிகள், திருப்பதி பெருமாள், விஜயேந்திரதீர்த்த சுவாமிகளுக்கு அருளாசி வழங்கும் வகையில், இன்றைய ஆராதனை நிகழ்வில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுவாமிகளின் மிகப்பெரிய வஸ்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடும், தமிழ்நாட்டின் மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற பிராத்திக்கிறேன். கும்கோணத்தில் இருந்து மந்திராலயம் செல்ல புதிய ரயில் சேவை தொடங்குவது குறித்து, மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்றார்.

நிறைவாக பேசிய திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி, தேவஸ்தானம் சார்பில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில் செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையில் வஸ்திர சமர்பணம் செய்யப்பட்டதாக கூறினார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வைத்தீஸ்வரன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.