ETV Bharat / state

இயற்கை மூலிகை மூலம் மாதம் ரூ.5 லட்சம் வருவாய்.. ஆன்லைன் பிசினஸில் அசத்தும் தஞ்சை பெண் தொழில்முனைவோர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 3:16 PM IST

Updated : Nov 28, 2023, 11:54 AM IST

Thanjavur Women Entrepreneur: தஞ்சாவூரில் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் முனைவோர் குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

Thanjavur Women Entrepreneur
இயற்கை மூலிகையை வைத்து ஆன்லைன் பிசினஸ் அசத்தி வரும் தஞ்சை பெண்

Thanjavur Women Entrepreneur

தஞ்சாவூர்: தற்போதைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் ரசாயன கலப்பில் உருவாக்கப்பட்டதாக உள்ளது. தற்போது இந்த ரசாயன பயன்பாட்டிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அதில் உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் கூந்தல், தோல், பல் மற்றும் உடல் சார்ந்த பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் ரசாயனத்தை தவிர்த்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு சமீப காலத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிபாளையம் சாலை அருகே உள்ள விஜய நகரில், வசீகர வேதா என்ற பெயரில் தூய மூலிகை தொழிற்சாலையை விஜயாமகாதேவன் என்ற பெண்மணி நடத்தி வருகிறார். இயற்கை மூலிகைகளைக் கொண்டு 60க்கும் மேற்பட்ட பொருள்களை தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் மாதத்திற்கு சுமார் 5 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் 40 பேருக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விஜயாமகாதேவன் கூறுகையில், "தனது அம்மா சொல்லிக் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு வீட்டிலேயே தலைக்கு தடவப்படும் கருவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி கலந்த எண்ணெய் , ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள், கூலாங்கிழங்கு, வெட்டிவேர், பாசிப்பயிர் கலந்த குளியல் பொடி போன்றவற்றை தயார் செய்து தங்களது வீடுகளில் பயன்படுத்தினோம். பின்னர் வீட்டு பயன்பாட்டுக்கு போக நண்பர்கள், உறவினர்களுக்கு அவற்றை தயார் செய்து கொடுத்ததால், நாளடைவில் இந்த இயற்கை பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் பொறியியல் பட்டதாரிகளான தனது மகன்கள் கார்த்திகேயன், சுரேந்தர் அளித்த ஆலோசனையின் பேரில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் மூலிகை பொருட்களை எப்படி தயாரிப்பது என்கிற செய்முறை விளக்கத்தை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்தோம். இதற்கு வட மாநிலங்களில் இருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் இப்பொருட்களை வாங்க நிறைய ஆர்டர்கள் வந்ததால் படிப்படியாக விற்பனையும் அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகளை சுமார் 40 பேரை வேலைக்கு அமர்த்தி, வாடகைக்கு வீடு எடுத்து இயந்திரங்கள் நிறுவி சோலார் பேனல் அமைத்து இப்பொருட்களை தயார் செய்து வருகின்றோம்" என தெரிவித்தார்.

நாள்தோறும் தயாரிக்கப்படும் மூலிகைப் பொருட்களை அன்றைக்கே விற்பனை செய்து, நாள் கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இயற்கைத்தன்மை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர். மேலும் ஆர்டர்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தின் மூலமாக வருவதால் வீட்டில் இருந்தே வருவாய் ஈட்டி வருகின்றார்.

இதற்கு 10 கம்ப்யூட்டர்கள் வைத்து ஆர்டர்களை கண்காணித்து விற்பனை செய்வதற்காக பெண் ஊழியர்களையும் நியமித்து உள்ளனர். சமூக வலைத்தளம் மூலம் வெளிநாடுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டு பொருட்கள் பார்சலில் அனுப்பி வைக்கின்றனர்.

இதில், செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, முருங்கை இலை, வெந்தயம், பாசிப்பயிறு, கருஞ்சீரகம் போன்ற கொண்டு தயாரிக்கப்படும் தலை முடிக்கு தடவப்படும் எண்ணெய், குளியல் பவுடர், முகப்பூச்சு, பல்பொடி, ஹேர் மாஸ்க், தலைக்கு தடவப்படும் மூலிகை டை, இளநரையை போக்கும் கையாந்தரை எண்ணெய், பொடுகு தொல்லைக்கு தீர்வு தரும் பொடுகு எண்ணெய், தலையில் பூச்சி வெட்டு, அரிப்பை குணமாக்கும் குமட்டிக்காய் எண்ணெய், ரோஜாப்பூ குளியல் பொடி, முடி உதிர்வை தடுக்கும் ரோஸ்மேரி, லெமன் கிராஸ், பாதாம் எண்ணெய், பப்பாளியில் முகப்பூச்சு, அவுரி பொடி, நெல்லிக்காய் பொடி, சீயக்காய் என 60க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.

ரசாயன பொருட்களை தவிர்த்து முழுவதும் இயற்கை மூலிகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தரமான பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுவதால், தொழில் முனைவோர் என்ற அடிப்படையில் மத்திய மாநில அரசும் இதற்கு ஊக்குவித்து வருகிறது. தற்போதைய கெமிக்கல் நிறைந்த வாழ்க்கை முறையில், கெமிக்கல் பொருட்கள் இல்லாமல் வாழ இதுபோன்ற வளரும் தொழிலாளர்களை ஊக்குவிப்பது அனைவரின் கடமையாகும்.

இதையும் படிங்க: "தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை" - மத்திய அமைச்சர் பகீர் தகவல்

Last Updated : Nov 28, 2023, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.