ETV Bharat / state

இராசராச சோழனின் 1038வது சதய விழா : 1038 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியமாடி இசை அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 1:02 PM IST

raja raja cholan's 1038th Sathaya Vizha: இராசராச சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் 1038 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம் ஆடி இசை அஞ்சலி செலுத்தினர்.

sathaya vizha
இராசராச சோழனின் 1038வது சதய விழா

இராசராச சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் இராசராச சோழனின் 1038 வது சதய விழா கொண்டாடப்பட்டது. சதய விழாவினை முன்னிட்டு இராசராச சோழனுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக பரதநாட்டிய விழா நடைபெற்றது.

இந்திய அரசு கலாச்சாரத் துறை அமைச்சகத்தின், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, அரண்மனை தேவஸ்தானம் இணைந்து நேற்று (அக்.24) சதய விழாவினை முன்னிட்டு அஜ்மா கலைப்பயண வழிகாட்டுதல் சங்கத்தின் மூலம் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள், வீணை இசைப்பவர்கள், நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் 1038 நடன கலைஞர்கள், விளக்கு ஏந்தி பெரியக் கோயில் நந்தி மண்டபம் முன்பு பரதநாட்டியம் ஆடினர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது ஆயிரம் இசைக் கலைஞர்கள், பெரிய கோயில் வளாகத்தில் பரத நாட்டியம் ஆடியது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியக் கோயிலில் 1038 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து பரத நாட்டியம் ஆடி இசை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலியை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் கல்யாணி என்பவர் கூறுகையில், "தஞ்சை பெரிய கோயிலில் பரதநாட்டியம் ஆடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கோயிலின் மகிமையை இன்னும் உயர்த்தும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமை" என தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் தர்ஷினி என்பவர் கூறும்போது, "இராஜராஜ சோழன் மற்ற மன்னர்கள் போல் இல்லாமல் கோயிலைக் கட்ட சிறிய வேலை செய்த தொழிலாளர்களின் பெயரையும் கல்வெட்டில் பதிய வைத்துள்ளார். அவர் ஆண்ட காலம் பொற்காலமாக உள்ளது. மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். பெரிய கோயிலில் நடனம் ஆடியது பெருமையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, சதய விழா குழு தலைவர் செல்வம், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

மேலும் சதய விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (அக்.25) அரசு சார்பில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் / மேடை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு! இசையின் வாயிலாக அம்பாளை தரிசித்த பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.