ETV Bharat / state

கட்சி கொள்கைக்கு சங்கடம் ஏற்படுத்திடாத வகையில் மேயர் செயல்பட வேண்டும் - கும்பகோணம் துணை மேயர் அறிவுரை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 12:53 PM IST

Kumbakonam Corporation Council Meet: கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 24 தலைப்புகள் விவாதத்திற்காக வைக்கப்பட்டிருந்தன.

கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்
கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 24 பொருட்கள் விவாதத்திற்காக வைக்கப்பட்டிருந்தன.

மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நிஹார் கேள்வி: கூட்டம் தொடங்கிய உடனேயே, 4வது வட்ட ஐயூஎம்எல் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நிஹார், “கடந்த சில நாட்கள் முன்பு, கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து, அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக பாஜக ஆதரவு பெற்ற இந்து அமைப்பின் சார்பில் புனித நீர் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் கே.சரவணன் பங்கேற்றது குறித்தும், அதனை கண்டித்து அவரது கட்சியினர் சிலரே மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இது எங்களை போன்ற கூட்டணி கட்சியினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கொள்கைக்கு எதிரான இயக்க நிகழ்வில் பங்கேற்றது சரியா” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மேயர் கே.சரவணன், “எதிர்பாராவிதமாக நான் வேறு ஒரு போராட்டத்தில் பங்கேற்ற இருந்த போது, போராட்டம் துவங்க கால தாமதமாகும் என்பதால் அருகில் உள்ள மகாமக குளம் சென்றேன். அங்கு சூர்யனார்கோயில் ஆதீனம் தன்னை சந்தித்து பேசினார். தான் திட்டமிட்டு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும், மேலும் அப்போது எனக்கு அந்த அமைப்பு பாஜக தொடர்புடைய இந்து அமைப்பு என்றும் தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

மேயருக்கு அறிவுரை வழங்கிய துணை மேயர்: இதில் திருப்தியடையாத துணை மேயர், “மாநகராட்சி மேயர் சரவணன் தான் வகிக்கும், மேயர் பொறுப்பை முழுமையாக உணர்ந்து, அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்திடாத வகையில் இனிவரும் காலங்களில் அவர் செயல்பட வேண்டும்” என சுட்டிக்காட்டி மேயருக்கு அறிவுறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாமன்ற உறுப்பினர் அய்யப்பன் மீது உரிய நடவடிக்கை: தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான 14வது வட்ட மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், ஒரு புலனாய்வு இதழில், வெளியான மேயரின் பேட்டியை சுட்டிக்காட்டி, அதில் தான் மாநகராட்சி கூட்டத்தில் கூட்டணிக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், அது உண்மை தான். நீங்கள் எப்போது கூட்டணிக்கு எதிராக தான் தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகிறீர்கள்.

இதனை நாளிதழ்களில் வெளியான செய்திகளை பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் மாமன்ற உறுப்பினர் அய்யப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்திற்கு புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இது மாமன்ற கூட்டம் என்பதால், இதற்கு மேல் உட்கட்சி குறித்து இங்கு விவாதிக்க வேண்டாம் என்றும் மேயர் சரவணன் தெரிவித்தார்.

பிறகு, மாமன்ற கூட்டத்தில் சமீபத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தனது முதல் மாத ஊதியமான ரூபாய் 30 ஆயிரத்தை, கேட்போலையாக நமக்கு நாமே திட்டத்தின் கீழான கல்வி வளர்ச்சி பணிகளுக்காக மாநகராட்சி ஆணையர் லட்சுமணனிடம் வழங்கினார்.

பாதாள சாக்கடை திட்டம் குறித்து விவாதம்: மேலும், மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் வட்டங்களில், பாதாள சாக்கடை பிரச்சினை தொடர்ந்து முழுமையாக சீரமைக்க முடியாத அளவிற்கு சிக்கல் நீடிப்பதால் வருகிற ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை, கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில் பாதாள சாக்கடை பிரச்சினை குறித்து மாமன்ற உறுப்பினர்கள், மாமன்ற அலுவலர்கள் கொண்ட சிறப்பு கூட்டம் கூட்டப்படும்.

அதில் பாதாள சாக்கடை திட்டம் ஒன்று குறித்து மட்டும் விரிவாக விவாதித்து, அதனை எப்படி முழுமையாக சீரமைப்பது, அதற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு என கணக்கிட்டு, அதனை சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக அரசிடமிருந்து பெற்று தீர்வு காண இருப்பதாகவும் மாமன்ற உறுப்பினர்களுக்கு துணை மேயர் தெரிவித்தார்.

எனவே வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் பாதாள சாக்கடை பிரச்சனைக்காக மட்டும் நடைபெறும் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளையும், அதனை சீரமைக்கும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: 'நீட் தேர்வு ரத்து என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும்' - பெ.மணியரசன் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.