ETV Bharat / state

'அமைச்சர் உதயநிதியிடம் பேசிவிட்டேன்' தென்காசி அரசு வேலையில் திமுகவினர் முறைகேடா? - வைரலாகும் வீடியோ

author img

By

Published : Jan 9, 2023, 11:02 PM IST

தென்காசி திமுக நிர்வாகிகள் பொதுக் கூட்டத்தில், திமுகவின் உறுப்பினர்களின் அரசு பணிக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பேசியுள்ளதாக, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி
தென்காசி

'அமைச்சர் உதயநிதியிடம் பேசிட்டேன்' தென்காசி அரசு வேலையில் திமுகவினர் முறைகேடா? - வைரலாகும் வீடியோ

தென்காசி மாவட்டத்தில், காலியாக உள்ள 38 ரேஷன் கடை விற்பனையாளர் பணிகள், 35 கிராம நிர்வாக உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்று நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜன.9) நடைபெற்ற திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் என்பவர் பங்கேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன்
தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன்

அப்போது பேசிய அவர், 'ரேஷன் கடை பணியாளருக்கான காலி பணியிடங்கள் 48. ஆனால், 4000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேபோல், கிராம நிர்வாக உதவியாளர் காலி பணியிடங்கள் 35 அதற்கு 3500 விண்ணப்பங்கள் என்னிடம் வந்துள்ளன. இதனை நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களுக்கு ஒவ்வொரு இடமும் கட்சிக்கு உண்மையாக உழைத்த கிளை கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் என குடும்பத்திற்கு ஒரு பணி என்று பிரித்து வழங்கியுள்ளேன்.

மேலும் அவர், “செங்கோட்டை நகர திமுக செயலாளராக ஒரு இஸ்லாமியர் இருந்தால் கட்சி வளராது என்பதால் இந்து ஒருவரை தலைமை கழகம் நியமனம் செய்துள்ளது' என்று பேசியது இஸ்லாமியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரசு பணிகள் குறித்து தென்காசி மாவட்டச் செயலாளர் பேசியது குறித்து அக்கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'கட்சி நிர்வாகிகளுக்கு பணிகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்டச் செயலாளர் பேசுகிறார். அதுக்காக, கட்சிக்காரர்களிடம் பணம் வாங்காமலா செய்து கொடுக்க போகிறார்கள்? தலையாரி வேலைக்கு ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரையிலும்; ரேஷன் கடை பணியாளர் வேலைக்கு ரூ.10 லட்சம் என விலை வைத்து வசூல் செய்துதான் வேலை வாங்கி தருவதாகக் கூறி வருகின்றனர்' என்றார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம், தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பட்டியல் கொடுத்ததாகவும், அதனை மாவட்ட ஆட்சியர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த காலிப்பணியிடங்கள் தகுதியானவர்களுக்கே வழங்கப்படும் என்று கூறியதால் மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்து தனக்கு வேண்டிய ஆட்களை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் - மு.க.ஸ்டாலின்
தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் - மு.க.ஸ்டாலின்

அதன்படி, பொங்கல் பண்டிகை (Pongal Festival) முடிந்த உடன், மாவட்ட ஆட்சியர் மாற்றம் இருக்கும், அதன் பிறகு இப்பணிகளுக்கு புதிய ஆட்சியர் மூலம் நியமனம் வழங்கப்படும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு பணியினை ஆளும் திமுக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் கூறுபோட்டு, முறைகேடாக விற்பனை செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'பொதுமக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு. திமுக தென்காசி மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் அரசு வேலை வாய்ப்புகளை தன் சொந்த கட்சிக்காரர்களுக்கே ஒதுக்குவதாகத் தெரிவிக்கும் இந்த காணொளி அதிர்ச்சி அளிக்கிறது' என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது" - ஈபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.