ETV Bharat / state

முட்டை, மாத்திரையில் அசத்தல் ஓவியம்.. கல்விக்காக ஏங்கும் ஊத்துமலை மாணவி.. அரசு உதவி செய்யக் கோரிக்கை!

author img

By

Published : May 31, 2023, 10:23 AM IST

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனக்கு ஓவியம் மீதான ஆர்வம் இருந்தும் அதனை முறையாக கற்க முடியாமல் உதவிக்காக காத்திருக்கிறார்.

முறையான ஓவியம் கற்க முடியாமல் முடங்கும் நிலை.. ஊத்துமலை மாணவியின் அசாத்தியமான ஓவியங்கள்
முறையான ஓவியம் கற்க முடியாமல் முடங்கும் நிலை.. ஊத்துமலை மாணவியின் அசாத்தியமான ஓவியங்கள்

முட்டை, மாத்திரையில் ஓவியங்கள் வரைந்து அசத்தும் மாணவி கல்பனா

தென்காசி: ஊத்துமலையைச் சுற்றிலும் ஏராளமான கிராமப்புறங்கள் உள்ளது. இந்த கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள், தங்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு விவசாய வேலையை மட்டுமே பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஊத்துமலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணா சாமி என்ற அன்னக்கிளி - குருவம்மாள் தம்பதி.

இவர்களது மகள் கல்பனா. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கல்பனா, கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதற்குப் பொருளாதார வசதி இன்றி ஒரு வருடமாக தற்போது தனது தனித்திறமையான ஓவியங்களினால் புதுமை படைத்து வருகிறார். தன்னால் இயன்ற பொருளாதாரத்தில் கிடைக்கும் பென்சில் மட்டுமே கொண்டு, கிடைக்கின்ற வெற்றுப் பக்கங்களில் விதவிதமான ஓவியங்களை வரைந்து, தனது கலைத் திறமையை வளர்த்து வருகிறார்.

அதேநேரம், முட்டைகள், மாத்திரைகள், காகிதங்கள் என கிடைக்கும் பொருட்களில் எல்லாம் தனது ஓவியத் திறமையை மெல்ல மெல்ல மெருகேற்றி வருகிறார். மேலும், இது குறித்து மாணவி கல்பனா கூறுகையில், “நான் ஊத்துமலை கிராமத்தைச் சேர்ந்தவர். நான் சிறு வயதிலிருந்தே விவசாயக் குடும்பம்தான். இன்று வரையிலும் விவசாயத் தொழிலை மட்டுமே செய்து வருகிறோம்.

எனக்குச் சிறு வயது முதலே வரையும் ஆர்வம் உண்டு. ஆனால், எனக்குள் இருந்த இந்த வரையும் திறமையை நான் கண்டறிந்தது எப்போது என்றால், 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதுதான். ஏனென்றால், அப்போதுதான் எனது அறிவியல் ஆசிரியர்கள், செய்முறை நோட்டில் நான் நன்றாக வரைவதாகக் கூறுவார்கள்.

மேலும், இதனை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள். அந்த நேரத்திலிருந்து நான் வரையத் தொடங்கினேன். தற்போது வரை அதனைச் செய்து கொண்டேதான் இருக்கிறேன். முட்டை, மாத்திரை போன்று எந்த பொருள் கிடைத்தாலும், அதில் வரைந்து கொண்டே இருப்பேன். எனக்கு வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.நான் கிராமப் பகுதியைச் சேர்ந்தவள் என்பதால், எனக்கு எந்த வசதியும் இல்லை. என்னால், இந்த கிராமத்தைத் தாண்டி செல்ல முடியவில்லை. எனவே, எனது வரைகலை ஆர்வத்தை ஊக்குவிக்க அரசு தரப்பில் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிஎஃப்ஏ(BFA) போன்ற பட்டப் படிப்புகள் வரைகலை உள்பட பல்வேறு கலைப் பிரிவுகளுக்கு அரசுக் கல்லூரிகளே இருக்கும் நிலையில், அதில் கூட சேர்ந்து பயில முடியாத மாணவி கல்பனாவுக்கு அரசு, தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டில் சும்மா இருந்த பொருட்கள் மூலம் கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம்.. தூத்துக்குடி 10ம் வகுப்பு மாணவன் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.