ETV Bharat / state

ரூ.1 கோடி மதிப்புள்ள நிலங்களைப் பொது ஊருணிக்குத் தானமாக கொடுத்த குடும்பங்கள்

author img

By

Published : Oct 11, 2021, 6:27 PM IST

Updated : Oct 12, 2021, 3:14 PM IST

சிவகங்கை அருகே நீண்ட நாள் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து, ஊருக்குப் பொதுவாக ஊருணி உருவாக்க தானமாகக் கொடுத்துள்ளனர். பொது நன்மை கருதிய கிராம மக்களின் இந்தச் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்த சிறப்புத் தொகுப்பு...

நிலங்களை பொது ஊரணிக்கு கொடுத்த குடும்பங்கள்
நிலங்களை பொது ஊரணிக்கு கொடுத்த குடும்பங்கள்

சிவகங்கை: மானாமதுரையிலிருந்து சற்றேறக்குறைய 40 கி.மீ., தொலைவில் இளையான்குடிக்கு அருகே வண்டல் எனும் கிராமம் அமைந்துள்ளது.

முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள வண்டல் கிராமத்தில் நெல், பருத்தி, மிளகாய் ஆகியவை முக்கியப் பயிர்களாகும். சுமார் 250 குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றன.

ஊருக்குப் பொதுவாக கண்மாய் இருந்தாலும் குடிப்பதற்கான நீரைப் பெற வண்டல் கிராமத்தில் பெரும் சிக்கல் நிலவி வந்தது.

ஏற்கெனவே, இங்கு அமைந்துள்ள ஊருணி குடியிருப்புக்கு அருகில் இல்லை. அத்துடன் அதிக நீர் தேங்குவதில்லை என்பதால், குடிநீர் என்பது வண்டல் கிராமத்தில் பெரும் சவாலானதாகவே இருந்து வந்தது.

நீண்ட நாள் பிரச்னையை சரி செய்வதற்காக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களது வீட்டு மனைகள், வயல்களை ஊருணி அமைக்கும் பொருட்டு தானமாக, தமிழ்நாடு அரசுக்கு எழுதிக் கொடுத்துள்ளனர்.

ஊருணி அமைக்கும் கனவு நினைவாகும் தருணம்

இதுகுறித்து தெற்கு வண்டல் பகுதியைச் சேர்ந்த கிராமத் தலைவர், சீமைச்சாமி கூறுகையில், 'எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை, இந்த ஊருணி மிக அத்தியாவசியமானதாகும். ஆகையால், ஊரிலுள்ள 25 பேர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விட்டுக்கொடுத்து, தற்போது ஊருணியை வெட்ட ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊருணி மூலம் எங்களுக்கான குடிநீர் மட்டுமன்றி, ஆடு, மாடுகளின் குடிநீர்த் தேவைகளும் பூர்த்தியாகும் என நம்புகிறோம்' என்கிறார், வார்த்தைகளில் நம்பிக்கைத் ததும்ப...

வானம் பார்த்த பூமியாகத் திகழும் வண்டல் கிராமம், தெற்கு வண்டல், வடக்கு வண்டல் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊருணி அமையவுள்ள இடம் தெற்கு வண்டல் கிராமம் ஆகும். ஊருணி அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தக் கிராம மக்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கை என்பதால், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், 'பிரதான்' என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம், தனது இண்டிகோ என்ற திட்டத்தின் வாயிலாக, கிராம மக்களின் பங்குத்தொகையோடு, தானும் பங்குத் தொகை வழங்கி, இந்த ஊருணியை அமைக்கவுள்ளது.

ஊரணி அமையவுள்ள நிலம்
ஊரணி அமையவுள்ள நிலம்

ஊருணியை அமைக்கும் தீர்மானம்

இது குறித்து பிரதான் நிறுவனத்தின் திட்ட நிர்வாகி மோகன் கூறுகையில், 'எங்களது கள ஆய்வின் அடிப்படையில், இந்த வண்டல் கிராமத்தை முன்மாதிரி ஊராட்சியாகத் தேர்வு செய்து, ஊராட்சித் தலைவர் முத்துக்குமாரை சந்தித்துப் பேசினோம்.

அப்போதுதான் புதிய ஊருணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்குப் பிறகு, தெற்கு வண்டல் கிராமத்தில் கிராமக் கூட்டம் நடத்தி, கடந்த ஜூலை மாதம் தொடங்கி, பல கட்டப்பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகுதான், ஊருணி அமைக்கும் தீர்மானம் எட்டப்பட்டது.

இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பிரதான் நன்கொடையாகவும், கிராம மக்கள் ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாயை நன்கொடையாகவும் வழங்கவுள்ளனர்' என்றார்.

கிராமத்திலுள்ள 20-க்கும் மேற்பட்டோருக்குச் சொந்தமான நிலம் என்பதால், இதனை ஒருங்கிணைத்துப் பெறுவதில் பெரும் சிக்கல் இருந்தது.

ஊரணி அமைக்கும் பணி தொடக்கம்
ஊரணி அமைக்கும் பணி தொடக்கம்

தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கிராமக் கூட்டங்களில் அனைவரிடமும் ஒப்புதல் பெறப்பட்டன. இந்தப் பகுதியில் நிலவும் கடுமையான நீர் சிக்கல் இதனை சாத்தியமாக்கியது.

நீர் பற்றாக்குறைக்கு வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு ஒரு காரணம்

'பிரதான்' நிறுவனம் இளையான்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கடந்த 2019 – 2020ஆம் ஆண்டில் மட்டும், இப்பகுதியில் கட்டனூர், அளவிடங்கான், முத்தூர் ஊராட்சிகளில் 7 கண்மாய்களும், 4 குளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இப்பகுதியில் மண் சார்ந்த மருதம், இலுப்பை, மருது போன்ற ஆயிரத்து 340 மரக்கன்றுகள் நடப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவை போக 7 நீர் நிலைகளில் 33 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

நீரியல் அறிஞரும் பிரதான் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான இரா. சீனிவாசன் கூறுகையில், 'சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு நீர் நிலை உள்ளது. இளையான்குடி ஒன்றியம், மழையை மட்டுமே நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள பகுதி.

சிவகங்கை மாவட்டத்தில் நீர் நிலைகள் அதிகமிருந்தும்கூட தேவையான நேரங்களில் நீரில்லாமல் போய்விடும். வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பின்மை ஆகியவையே இதற்குக் காரணம். இதனால், கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 'பிரதான்' இப்பகுதியில் பணி செய்து வருகிறது.

கிராம மக்களின் தேவையைப் பொறுத்து 'பிரதான்' பணிகள் முடிவு செய்யப்படுகின்றன. இந்தாண்டு செப்டம்பர் மாதம் பெய்த மழையில், பிரதான் பணிகள் மேற்கொண்ட எல்லா கண்மாய்களும், குளங்களும் நிரம்பிவிட்டன.

ஊருக்கு நிலம் தருவது நல்ல முன்னுதாரணம்

மேலும் அவர் கூறுகையில், 'வண்டல் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் சிறுவிவசாயிகள்தான். ஆனாலும், கிராமத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தங்களது சொந்த நிலங்களை ஊருணி அமைப்பதற்காகத் தந்துள்ளனர்.

1 கோடி ரூபாய் விற்பனை மதிப்புள்ள நிலத்தை ஊருக்குத் தானமாகத் தருவதென்பது நல்ல முன்னுதாரணமுள்ள செயல்பாடாகும். தற்போது உருவாக்கப்படவுள்ள இந்த ஊருணியில் உத்தேசமாக 7 ஆயிரம் கனமீட்டர் மண் தோண்டப்பட்டுச் சுற்றிலும் கரை எழுப்பப்படும்.

மேலும், அந்த மண்ணைக் கொண்டு, சிறிய விளையாட்டுத் திடல் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை, இந்த ஊருணி நிறைகிறது என்று வைத்துக் கொண்டால், 15 ஆயிரம் கன மீட்டர் நீர் இதில் இருக்கும். ஆண்டின் 9 மாதங்களுக்கு, இந்த நீர் வண்டல் கிராமத்திற்குப் போதுமானதாக இருக்கும். இந்த ஆண்டைப் போல் மழைப்பொழிவு இருந்தால், ஆண்டு முழுவதும் இந்த ஊருணியில் நீர் இருக்கும்' எனத் தெரிவித்தார்.

ஊருணி அமைய சொந்த நிலத்தை அரசுக்கு விட்டுக்கொடுத்த குடும்பங்களின் கதை

வறட்சியை வெல்லும் அருமருந்து

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வற்றாத ஜீவநதிகள் என்று எவையும் இல்லாத சூழலில், நமது முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட சிறு, குறு நீர் நிலைகளே வறட்சியை வெல்லும் அருமருந்தாகத் திகழ்கின்றன. அந்த வகையில் நீர்நிலைகளை உருவாக்குவதிலும் புனரமைப்பதிலும் பேணுவதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களாகவே நாம் உள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக தங்களது சொந்த நிலங்களை, பொது ஊருணி உருவாக்கத்திற்குத் தானமாக வழங்கிய வண்டல் கிராம மக்களின் செயல், வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க நிகழ்வாகும்.

அயராது முயன்று போராடி சாதித்த, பிரதான் நிறுவனத்திற்கும் இந்தச் சாதனையில் பெரும்பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதையும் படிங்க: அழிவை நோக்கி செல்லும் வைகையை காப்பாற்ற வேண்டியது அவசியம் - தண்ணீர் மனிதர்

Last Updated : Oct 12, 2021, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.