ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு பேரணி!

author img

By

Published : Mar 1, 2020, 11:59 PM IST

சேலம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பெருமித நடை பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு பேரணி
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு பேரணி

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக தமிழ்நாடு காவல் துறை 'காவலன் SOS' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இச்சூழலில், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பிலும் வன்முறை தடுப்பு குறித்த “பெருமித நடை பேரணி” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு பேரணி

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி கடைவீதி சாலை, திருவள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிலைய சாலைப் பிரிவு, மாநகராட்சி அலுவலக வளாக சாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகம் வந்தடைந்தது. இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை எந்தியவாறு சென்றனர்.

இந்தப் பேரணியில் நேசக்கரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம், லோட்டஸ் குழந்தைகள் காப்பகம், கிராம சேவை முக்தி சேவிகா சேவகர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.