ETV Bharat / state

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Jun 12, 2023, 10:03 AM IST

Updated : Jun 12, 2023, 12:48 PM IST

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) தண்ணீர் திறந்து வைத்தார். அணையில் இருந்து தற்போது 69 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணை திறக்கப்பட்டதும் சீறிப்பாய்ந்து வெளியேறிய காவேரி நீரை முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணையை மூன்றாவது முறையாக திறந்து வைப்பதும் குறிப்பிடத்தக்கது.

காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும், அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். மேலும், ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் அணை ஜனவரி 28-ம் தேதி தான் மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 16.50 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார்.

காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார். பின் அணையில், முதல்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து, திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூன்றரை நாள்களில் 200 கிலோமீட்டர் தூரம் பயணித்து கல்லணையை சென்றடையும். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 90-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி, காவிரிக் கரையோரப் பகுதிகள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியான முன்னெடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு வருடங்களாக வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் குறுவைத் தொகுப்பு திட்டங்கள் அளிக்கப்பட்டதன் வாயிலாக, டெல்டா மாவட்டங்களில் சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதுடன் கடை மடை வரை தண்ணீர் சென்றடைவதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்களுக்காக ரூ.75.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியா, பொட்டாஷ், டிஏபி உரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் கருவிகள் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் 5 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடி அதிகரிக்கும்” என்று கூறினார்.

பின்னர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே திமுக அரசு திறந்து வைத்து வருவதாக எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது அதிமுகவின் கலை என்றும் அதிமுக பாணி என்றும் விமர்சித்தார். மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கி திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் திறப்பு விழா கண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாகவும் கூறினார். பின் தமிழகத்தைச் சேர்ந்த இருவரை பிரதமராக விடாமல் திமுக தடுத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், “இதுதொடர்பாக அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாக சொன்னால் தான் விளக்கம் அளிக்க முடியும்” என்றார்.

மேலும் தமிழர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த தமிழிசை, முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் மோடி மீது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என்றும் கூறினார். திமுக-காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்திற்கென பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் போது தமிழகத்திற்கென கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றார்.

மத்திய திட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தொடர்பான விவரங்களை மட்டுமே பாஜக கூறியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசில் இருந்து பொதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே வெளி வந்துள்ளதாகவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் தமிழகம் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாகவும், ஆனால் தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிதி குறைவாகவே வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மதுரையில் 1,200 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக சொல்லிய நிலையில் இதுவரை அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: நெருங்கும் குறுவை சாகுபடி; டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Last Updated : Jun 12, 2023, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.