ETV Bharat / state

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை.. 3.5 டன் பால் பவுடர் உள்ளிட்டவைகளை அனுப்பிய சேலம் மாவட்ட நிர்வாகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 10:50 PM IST

chennai flood help: மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக, 3.5 டன் எடையுள்ள பால் பவுடர் அடங்கிய 7வது சரக்கு லாரி சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சேலம்: சென்னையில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3.50 டன் பால் பவுடர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் “மிக்ஜாம்” புயல் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட 3.50 டன் பால் பவுடர்கள், 70,000 பிஸ்கட் பாக்கெட், 55,000 குடிநீர் பாட்டில்கள், 25,000 பால் பாக்கெட்டுகள், 15,000 பிரெட் மற்றும் பன் பாக்கெட்டுகள், 1,000 ஜூஸ் பாக்கெட்டுகள், அரிசி, ரவை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய 500 தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மெழுகுவர்த்திகள், துண்டுகள், தீப்பெட்டிகள், போர்வைகள், நாப்கின்கள், லுங்கிகள், நைட்டிகள், பேஸ்ட், பிரஷ் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் அட்டைப்பெட்டிகளில் முறையாக அடுக்கி அனுப்பும் பணி இரவு பகலாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி மாவட்ட ஆட்சியரால் இன்று (டிச.7) வழியனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தேவைக்கு ஏற்ப சென்னைக்கு நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்க, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியருடன் இணைந்து இப்பணிகளை சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவளார் ரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியினை இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.