ETV Bharat / state

சேலம் எஸ்விஎஸ் நகைக்கடை மோசடி; பணத்தை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 10:53 AM IST

Svs gold jewellery cheating issue
எஸ்விஎஸ் நகைக்கடை மோசடி

Svs gold jewellery cheating issue: சேலம் உள்ளிட்ட 11 நகரங்களில் செயல்பட்டு வந்த எஸ்விஎஸ் நகைக்கடை மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க திரண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்: சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் மற்றும் தர்மபுரி, அரூர் உள்பட 11 இடங்களில் நகைக்கடைகளை நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் மாதச் சீட்டு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை வழங்கும் திட்டம் என கவர்ச்சிகரமான பல திட்டங்களையும் சபரிசங்கர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை நம்பி ஏராளமானவர்கள் நகை திட்டத்தில் சேர்ந்து, தங்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் சேமிப்பு பணத்தை செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அனைத்து கடைகளையும் திடீரென மூடிவிட்டு, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தீபாவளி நேரத்தில் சீட்டு போட்டவர்கள், நகை எடுக்க வந்தவர்கள், நகைக்கடைகள் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், அயோத்தியபட்டணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், நகை சீட்டு மற்றும் சகோதரியின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக 11 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்ததாகவும், அதனை திருப்பித் தராமல் சபரிசங்கர் தலைமறைவாகி விட்டதாகவும், எனவே அவரை கண்டுபிடித்து தனது பணம் மற்றும் நகையை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஜெய்சல்குமார் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளர் சபரிசங்கர், மேலாளர்கள் கவின், அஜித் ஆகியோர் மீது மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், எஸ்விஎஸ் நிறுவனத்தில் நகை, பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர், நேற்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் அதிகளவில் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “புதிது புதிதாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை ஆரம்பித்ததால், நம்பி நகை மற்றும் பணத்தைச் செலுத்தினோம். ஒவ்வொரு பகுதியிலும் தனியார் ஏஜென்ட்களை வேலைக்கு அமர்த்தி வீடுதோறும் நோட்டீஸ் கொடுத்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி எஸ்விஎஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றிவிட்டது.

தங்க நகை சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து, ஒவ்வொருவரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகையை முதலீட்டாக பெற்றுக் கொண்டனர். ஆனால், இதுவரை எங்களுக்கு பணமும் நகையும் வரவில்லை, நிறுவனத்திற்குச் சென்று பார்த்தபோது நிறுவனம் பூட்டியிருந்தது, அந்த நபர்களும் தலைமறைவாகிவிட்டனர். எங்களைப் போன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகையையும், பணத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்காக சேமிப்பாக செலுத்தியதை ஏமாற்றி விட்டனர். எனவே, இழந்த பணத்தை காவல்துறையினர் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சஹாரா குழும நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.