ETV Bharat / state

இதற்காகத்தான் ரெய்டா? - எடப்பாடி பழனிசாமி சொல்லும் காரணம் இதுதான்!

author img

By

Published : Dec 15, 2021, 5:18 PM IST

தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடைபெறும் நிலையில், எதற்காக இந்த ரெய்டு நடைபெறுகிறது என்பது குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இத்தோடு திமுக அரசு ஐந்து அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியுள்ளது.

இன்று தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்றுவரும் சோதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.15) செய்தியாளரைச் சந்தித்தார்.

இதற்காகத்தான் ரெய்டா?

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களைத் திசை திருப்பும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளை நடத்திவருகிறது.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப் போட்டுவருகிறது.

அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத திராணியற்ற திமுக அரசு மக்களைத் திசைதிருப்பும் வகையில் சோதனை நடத்திவருகிறது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை அசைத்துவிட முடியாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்போம்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு என்பது போன்ற எந்தக் கோரிக்கையும் திமுக அரசு நிறைவேற்றப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள். டீசலுக்குக் குறைக்கவேயில்லை. அதிமுக வீழ்ந்துவிடும் என நினைத்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் அதிமுக வளர்ந்துவருகிறது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 இடங்களில் அதிமுக உள்கட்சித் தேர்தல் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திமுகவைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அந்த வழக்குகளில் எந்த நடவடிக்கையும் இல்லை.

மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முடக்கவே ரெய்டு

தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் கையூட்டு (லஞ்சம்) தலைவிரித்தாடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஏழு மாதங்களில் ஆறு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாத காரணத்தால் வடகிழக்குப் பருவமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் ஒரே நேரத்தில் 160 பொறியாளர்களைப் பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அனுபவமில்லாத பொறியாளர்களால் நீர் எங்கு தேங்கும், என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது.

வரும் 17ஆம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். திமுக அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்துவிட்டது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவே இல்லை.

கூட்டணி மாறுவது பாமகவுக்கு வாடிக்கை

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துவருகிறார். வேளாண் கடன் ரத்து முழுமையாகச் செய்யப்படவில்லை. ஐந்து சவரன் வரை வங்கிகளில் அடைமானம் வைத்தவர்களுக்குத் தள்ளுபடி என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே எனச் சொல்கிறார்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்பதைக் கைக்கழுவிவிட்டார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலின்போதே கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார்.

கூட்டணியில் என்ன துரோகம் செய்தார்கள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வாடிக்கையான செயல்" என்று கூறினார். பேட்டியின்போது அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பணியிடை நீக்கம்: கூட்டுறவு வங்கிச் செயலாளர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.