ETV Bharat / state

தொழில் முனைவோருக்கான மையமாக சேலம் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Sep 30, 2021, 8:53 AM IST

Updated : Sep 30, 2021, 10:14 AM IST

தமிழ்நாடு அளவில் தொழில் முனைவோருக்கான மையமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அதில் உற்பத்தி குழும நிர்வாகிகள், வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர், கயிறு உற்பத்தியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, சேலம் மாவட்டத்தில் தொழில் வளத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தொழில்துறையில் உள்ள சிக்கல்கள், தொழில் முனைவோருக்கான கோரிக்கைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு அரசுக்கு தொழில் நிறுவனங்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது. தேர்தல் நேரத்தில் எல்லா கட்சிகளும் வாக்குறுதி அளிக்கின்றன. மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. திமுகவைப் பொறுத்தவரை இதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மற்ற வாக்குறுதிகளை நிதி நிலை கருதி அதில் உள்ள சங்கடங்கள், குளறுபடிகள், முறைகேடுகளைச் சரிசெய்த பின்னர் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

சொன்னது இல்ல, சொல்லாததையும் செய்வோம்

202 வாக்குறுதிகளில் சொன்னது மட்டுமல்லாது, சொல்லாததையும் செய்துள்ளோம். குறிப்பாக தொழில் துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. 165 கோடி ரூபாய் முதலீடு மானிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 15 வகையான உரிமம் பெறுவது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்பேட்டைகள்

வங்கிகளில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் ஆவணங்களை இணைய வழியில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 5 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி வேளாண் வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது.

45 கோடி ரூபாய் ஒதுக்கீடு

முதலமைச்சர் ஸ்டாலின்

சேகோ சர்வ் சார்பில் 4 இடங்களில் கிடங்குகளை மேம்படுத்த 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கோவை, சென்னையில் குறைந்த விலையில் வாடகை வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களை சிறந்த ஏற்றுமதியாளர் ஆக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அளவில் தொழில் முனைவோருக்கான மையமாகச் சேலம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. ஜவ்வரிசி, வெள்ளிக் கொலுசு பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இங்கு வளர்ந்து வருகின்றன. 22,286 சிறு குறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஹெலிகாப்டர் உதிரிபாக தயாரிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்தில் சேலம் மாவட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இங்கு பாராசூட் தயாரிப்பு, ராணுவ சீருடை, ஹெலிகாப்டர் உதிரிபாக தயாரிப்பு தொழில்கள் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது. சேலம் மாவட்டம் பெரிய சீரகாபாடி மாபெரும் உணவு பூங்காவினை 58.81 ஏக்கரில் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

இதேபோன்று கஞ்ச நாயக்கன்பட்டி பகுதியிலும் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறையுடன் நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளைத் தயங்காமல் கேட்கலாம். அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் " என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்

Last Updated : Sep 30, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.