ETV Bharat / state

சேலத்துக்கு வந்த 2819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

author img

By

Published : Mar 27, 2021, 5:41 PM IST

சேலம்: மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக கூடுதலாக 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர்
முதலமைச்சர்

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்த வேண்டியுள்ளதால் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 20 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டுடன் மொத்தம் 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலர் சி.அ. ராமன், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடுசெய்யப்பட்டு ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது.

சேலத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சேலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இது குறித்து சி.அ. ராமன் கூறுகையில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் முடிவுற்று சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளில் (வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள்) தேர்தல் வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்துவதற்காக ஏற்கனவே 20 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5,142 கட்டுப்பாட்டுக் கருவிகள், 34 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,740 தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடுசெய்து ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டு அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021-க்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் நீங்கலாக) 19ஆம் தேதிவரை அன்றுடன் நிறைவுபெற்றது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 412 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. 20ஆம் தேதி அன்று இவ்வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் 186 மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன.
மேலும், வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான 22ஆம் தேதி அன்று வரை 19 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டு, அன்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்களும், ஆத்தூர் (தனி) தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்களும், ஏற்காடு (எஸ்.டி) தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்களும், ஓமலூர் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்களும், மேட்டூர் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.


இதைத்தவிர எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களும், சங்ககிரி தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்களும், சேலம் (மேற்கு) தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களும், சேலம் (வடக்கு) தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்களும், சேலம் (தெற்கு) தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்களும், வீரபாண்டி தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இதனால் இந்த ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக 750 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்திற்கு நேற்றைய தினம் எடுத்துவரப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாரத் மின்னணு நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல்நிலை சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்டுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்துவதற்குக் கூடுதலாக 2,819 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021-க்கு பயன்படுத்த தயார்நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டுடன் 2,819 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆறு தொகுதிகளுக்கு காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படுகின்றன. மேலும், அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பு அறைகளுக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.