ETV Bharat / state

பொறாமையால் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு.. பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 11:06 PM IST

மதுரையில் நடந்த எங்களது மாநாட்டின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, பொறாமையால் சேலத்தில் இளைஞரணி மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

edappadi palaniswami
பொறாமையால் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம்: ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘கடந்த 20.8.2023ம் தேதி மதுரையில் அதிமுக வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்தது. அதற்கு உதவிய அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்தார். மேலும், அதிமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து தமிழக அளவில் சேலம் புறநகர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு பணியாற்றிய நிர்வாகிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்’.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “தமிழக அளவில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகின்றன.

அதனைக்கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும், அதற்கான தேதியை அந்தந்த பகுதி நிர்வாகிகள் முடிவு செய்து தலைமையின் ஒப்புதல் உடன் போராட்டத்தை நடத்துவார்கள்”எனக் கூறினார்.

மதுரை மாநாடு குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, “அவர் விரக்தியின் விளிம்பில் இருப்பதைக் காட்டுகிறது எனவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தால் மாநாடு எப்படி நடந்தது? என்று தெரிந்திருக்கும் என்றார்.

மேலும், மாநாட்டில் பட்டிமன்றம் கருத்தரங்குகள் அழகாக நடைபெற்றன எனவும், அதிமுக அரசின் சாதனைகளையும், திமுக அரசின் சோதனைகளையும் புள்ளி விவரங்களோடு எடுத்துக் கூறினேன் என்றார். அதைப் பொறுக்க முடியாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் என்றார்.

அவர் கட்சிக்கு வந்து ஆறு மாத காலம் தான் ஆகிறது எனவும், அவருக்கு என்ன அரசியல் தெரியும்? நான் 49 ஆண்டுக் காலம் அதிமுகவில் உள்ளேன். என்னைப் போல இன்னும் பலர் 50 ஆண்டுக்காலம் கடந்தும் அதிமுகவில் உள்ளனர். அவர்களெல்லாம் இணைந்து தான் இவ்வளவு மிகப்பெரிய வெற்றி மாநாட்டை நடத்தி இருக்கிறோம் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் முதலமைச்சர் திணறுகிறார் எனவும், குறுவை சாகுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனால் பயிர்கள் கருகி வருகின்றன. கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட போது முதலமைச்சர் ஸ்டாலின் நான் டெல்டா காரன் என்றார்.

இப்போது அந்த டெல்டா காரன் என்ன செய்கிறார்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் எந்த உதவியும் பெற முடியாமல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அதேபோல, இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. குடிநீர் பிரச்சினை வந்து விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது எனவும், அதற்காக முதல் கட்டம் பணியாக வாக்குச்சாவடிக்குழு அமைக்கப்பட்டு வருகிறது எனவும், அதனைத்தொடர்ந்து பாசறை குழு, மகளிர் குழு அமைக்கப்படும் எனவும், பின்னர் அதிமுக பரப்புரை மேற்கொள்ளும் என்றார்.

கார் ஓட்டுநர் கனகராஜ் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டியது இல்லை எனவும், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரைத் தலைமைச் செயலகம், அதிமுக தலைமைக் கழக அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு காரில் பயணித்திருக்கிறார்.

அப்போது யார் டிரைவராக இருந்தார்கள் என்பது ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்கு தெரியும். புகழேந்தி திமுகவுக்கு ஜால்ரா அடித்து வருகிறார். அவர் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு 40 சதவீதமாக உயர்ந்து விட்டது.

இது குறித்து தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல திமுக அரசு மவுனம் காக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக கூறுகிறார். கடந்த 2010ல் திமுக மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகித்தது.

அப்போது தான் நீட் தேர்வு குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிடுகிறது எனவும், அவர்களது ஆட்சி காலத்தில் கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு என்பது நிதர்சமான உண்மை. ஆனால் உண்மைக்கு மாறாக பொய்யான வாக்குறுதி கொடுத்து திமுக தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டு ரத்து செய்ய முடியாமல் திணறுகிறது” என்றார்.

இதையும் படிங்க:பெரம்பலூரில் 987 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.