ETV Bharat / state

“அதிமுக - பாஜக பிரிவு நாடகம் அல்ல” - எடப்பாடி பழனிசாமி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 12:31 PM IST

Updated : Oct 4, 2023, 4:01 PM IST

Edappadi Palaniswami: அதிமுக - பாஜக பிரிவு நாடகம் இல்லை என்றும், I.N.D.I.A கூட்டணிதான் நாடகம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

interview-with-eps-leader-of-opposition-in-salem-and-general-secretary-of-aiadmk
நாடாளுமன்றத்தில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். - எடப்பாடி

“அதிமுக - பாஜக பிரிவு நாடகம் அல்ல” - எடப்பாடி பழனிசாமி

சேலம்: சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறும்போது, பா.ஜ.க - அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது குறித்த கேள்விக்கு “அது பாஜகவினருடைய விருப்பம். செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இரண்டரைக் கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிக் கொண்டது.

நாடாளுமன்ற கூட்டணியைப் பொறுத்திருந்து பாருங்கள். பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகியது இரண்டரைக் கோடி தொண்டர்களுடைய உணர்வு. பாஜக மற்றும் அதிமுக தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் பிரியாது. அதிமுக தலைமையிலான கூட்டணி, பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

2021 சட்டமன்ற தொகுதி வாக்குகளை வைத்து பார்க்கும்போது, 7 நாடாளுமன்றத் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். சில தொகுதியில் குறைந்த வாக்குகளில்தான் வெற்றி வாய்ப்பை எங்கள் வேட்பாளர்கள் இழந்துள்ளனர். உறுதியாக 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

கடந்த இரண்டரை ஆண்டு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியாக 520 அறிவிப்புகளை வெளியிட்டார். 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். மின் கட்டண உயர்வு 12 சதவீதம் முதல் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரை சந்தித்துள்ளனர். கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவு உறுதியான முடிவு. பாஜக - அதிமுக பிரிவு நாடகம் இல்லை. I.N.D.I.A கூட்டணிதான் நாடகம். ஆம் ஆத்மி கட்சி தங்களது வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். I.N.D.I.A கூட்டணி, முரண்பாடு கருத்துள்ள கூட்டணிகள் ஒன்றாக இணைந்துள்ளது. அது முழு வடிவம் பெறவில்லை.

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவையை அறிந்து செயல்பட்டு இருக்க வேண்டும். அவசரமாக வந்து ஸ்டாலின் தண்ணீர் திறந்து, நான் டெல்டாக்காரன் என கூறினார். இப்போது டெல்டாக்காரன் என்ற வார்த்தையை அவர் கூறுவது இல்லை. குறுவை சாகுபடி நிலை என்பதை நேரில் சென்று ஸ்டாலின் பார்க்கவில்லை. டெல்டாவில் ஐந்தரை லட்சம் ஏக்கரில், மூன்றரை லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேட்மூரில் மூன்று நாட்கள்தான் தண்ணீர் திறக்க முடியும்.

ஸ்டாலின் நீதிமன்றத்தை அணுகி, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அப்போது ஸ்டாலின் தூங்கிவிட்டார். I.N.D.I.A கூட்டணியில் சேரும்போது காவிரி பிரச்னையை எடுத்து வைத்து இருக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் அவரது கோரிக்கையை எடுத்து வைத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்தாவது பேசி இருந்தால், காவிரியில் சாதகமான சூழ்நிலை எட்டப்பட்டு இருக்கும். காவிரி நிலைக்கு ஸ்டாலின்தான் காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடியல் திமுக ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின், அவர் கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்ற மத்தியில் ஆட்சி வேண்டும் என நினைக்கிறார்.

கிராம சபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதிலித்துவிட்டார். பா.ஜ.க எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. தொண்டர்கள் உழைத்தால் கட்சி வெற்றி பெறும். பா.ஜ.க மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற பிரச்னையும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறும். அதேபோல் அடுத்து வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெரும். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்து திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதை ஆசிரியர்கள் கேட்பது அவர்களின் உரிமை, அதை நிறைவேற்றுவது அரசின் கடமை” என கூறினார்.

இதையும் படிங்க: என்எம்சி அறிவிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!

Last Updated : Oct 4, 2023, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.