ETV Bharat / state

“தமிழகத்தில் புதிதாக போதை ஒழிப்பு காவலர்கள் பிரிவை உருவாக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:41 AM IST

Anbumani Ramadoss: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழகத்தில் புதிதாக போதை ஒழிப்பு காவலர்கள் பிரிவை ஏற்படுத்தி, 20 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Anbumani Ramadoss
தமிழகத்தில் புதிதாகப் போதை ஒழிப்பு காவலர்கள் பிரிவை உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ராணிப்பேட்டை: அரக்கோணம் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் பாமக வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சோளிங்கரில் நேற்று (அக்.28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மகளிர் உரிமைத் தொகைக்கு கள ஆய்வுகள் நடத்தும் தமிழக அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கும் ஆய்வுகள் நடத்த வேண்டும். இந்த ஆய்வுகள் நடத்தினால் மட்டுமே தமிழகத்தில் எந்தெந்த சாதியினர், எவ்வளவு பேர் வசிக்கின்றனர் என்பது தெரியும்.

அப்போது எந்த சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைய வேண்டும், யார் குடிசை வீட்டில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரிய வரும். இதுவே சமூகநீதி. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் என்பது மக்கள் தொகை அடிப்படையில் 32 ஆக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரம் உத்தரப்பிரதேசத்தில் 79 தொகுதி என்பது 120 தொகுதியாக அதிகரிக்கப்பட உள்ளது" என கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. குறிப்பாக ராணிப்பேட்டையிலும் மருத்துவக் கல்லூரி இல்லாமல் உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் டாக்டர்கள், 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 ஆயிரம் கோடி குறைத்துள்ளனர். இதில் தமிழகமே பரவாயில்லை. மேற்குவங்கம் மிகவும் மோசம். இந்த திட்டம் பெண்களுக்கான திட்டம். இதில் நிதியைக் குறைக்கக் கூடாது. மத்திய அரசின் இந்த திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது" என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. கஞ்சா விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மதுவால் ஒரு தலைமுறை நாசப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சாவால் அடுத்த தலைமுறையும் நாசமாய் விடுமோ என்ற பயம் எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் இப்போது மிகப்பெரிய பிரச்னையாகக் கஞ்சா உள்ளது.

மாதந்தோறும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க போதை ஒழிப்பு போலீஸ் பிரிவைப் புதிதாகத் தொடங்கி, அதில் 20 ஆயிரம் காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். கஞ்சாவை ஒழிக்க முதல்வர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: “ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும்” - எல்.முருகன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.