ETV Bharat / state

கூடுதல் மகசூல் கிடைக்க கடுமையாக உழைத்த விவசாயிகள்: மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

author img

By

Published : Jun 1, 2021, 12:44 PM IST

ராமநாதபுரம்: இரண்டாயிரத்து 766 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் மகசூல் கிடைக்க கடுமையாக உழைத்த இரண்டாயிரத்து 214 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

கூடுதல் மகசூல் கிடைக்க கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
கூடுதல் மகசூல் கிடைக்க கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம், அச்சுந்தன்வயல் கிராமத்திற்கு இன்று (மே.31) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் சென்று, வேளாண்மைத்துறையின் ஒருங்கிணைப்பின்கீழ் விவசாயிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாம் போக சாகுபடி பணிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து ஆட்சியர் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 823 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,694 கண்மாய்கள் உள்ளன . அதில் 502 பொதுப்பணித்துறை கண்மாய்ளும் , 1,192 சிறு பாசன கண்மாய்களும் அடங்கும். இருப்பினும் இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி என்ற பொதுவான பார்வை இருந்து வருகிறது .

மாவட்டத்திலுள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடியை மட்டுமே ஆர்வமுடன் மேற்கொள்கின்றனர். இரண்டாம் போக சாகுபடியில் ஆர்வம் காட்டாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றிடும் விதமாக மாவட்டத்திலுள்ள விவசாயிகளை முதல் போக நெல் சாகுபடியைத் தொடர்ந்து, இரண்டாம் போக சாகுபடி மேற்கொள்ள ஊக்கப்படுத்திடும் வகையில் வேளாண்மைத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாயிரத்து 214 விவசாயிகள் மூலம் இரண்டாயிரத்து 766 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பயிறு, எள், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளன. இதன் மூலம் ஒன்ப்தாயிரத்து 400 குவிண்டால் அளவில் கூடுதல் மகசூல் கிடைக்கப் பெற்று விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது.

விவசாயிகளை இரண்டாம் போக சாகுபடிக்கு ஊக்குவித்த இப்பணி மிகுந்த மன நிறைவை அளிக்கின்றது. இதற்காக கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.