அரசியல் பிரமுகர்கள் பிரச்னையால் நிறுத்தப்பட்ட மண்டையூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 19, 2024, 3:27 PM IST

மண்டையூரில் இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்

Mandaiyur jallikattu 2024: அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது தொடங்கியுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் பிரச்னையால் நிறுத்தப்பட்ட மண்டையூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

புதுக்கோட்டை: தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களைக் கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாட்டின் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியிலும், இரண்டாவது போட்டி வன்னியன் விடுதியிலும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜன.19) விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் ஜல்லிக்கட்டு நடைபெற இருந்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இரு கட்சியினர் இடையே யார் போட்டி துவங்கி வைப்பது என்ற பிரச்சினை காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க இருந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன், கோட்டாட்சியர் தெய்வநாயகி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்து, காளைகளை அவிழ்த்துவிடுமாறு அறிவுறுத்தினர்.

அப்போது விழா கமிட்டியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அதிமுக ஆதரவாளர்கள், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் வந்த பின்புதான் மாடுகளை அவிழ்க்க முடியும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டி 2 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டு தடைபட்டது.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், சுமார் 2.30 மணி நேரத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இதே போல், நேற்றைய தினம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் ஒருவருக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பரிசு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்த நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்குள் அரசியல் கொண்டு வரக்கூடாது என்று ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் கோரிக்கை இருந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியானது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடந்தாலும், அந்தந்த மாவட்ட நிர்வாகமே அனுமதி வழங்க வேண்டும் என்ற போதிலும், அதை மாவட்ட நிர்வாகமே முன்னின்று நடத்தி, அரசியல் உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: "தமிழக - இலங்கை மீன்வள அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு" - கிழக்கு மாநில ஆளுநர் செந்தில் தொண்டைமான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.