ETV Bharat / state

"100 சதவீதம் பாஜகவை கண்டு திமுக பயப்படுகிறது" - புதுக்கோட்டை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 9:35 AM IST

பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறக்கும் போது திமுகவிற்கு அடிவயிறு எரிகிறது என்றும் 100 சதவீதம் பாஜகவை கண்டு திமுக பயப்படுவதாகவும் புதுக்கோட்டை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

“பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறக்கும் போது திமுகவிற்கு அடிவயிறு எரிகிறது
புதுக்கோட்டை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார்

“100 சதவீதம் பாஜகவை கண்டு திமுக பயப்படுகிறது”

புதுக்கோட்டை: பாஜகவை பொறுத்தவரை திமுக ஆட்சியில் எதுவும் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என புதுக்கோட்டை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து வருகிறார். இதன் மூன்றாம் கட்ட பயணத்தை, கடந்த 16ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தொடங்கிய அவர், வரும் நவம்பர் 5ஆம் தேதி புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியிலும், 6ஆம் தேதி கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜகவினர் சார்பில், பிளக்ஸ் பேனர்கள், ஆட்டோ விளம்பர பேனர்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவது, மேளதாளம், நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை பாக்கு, பூ, சந்தனம், குங்குமம், தாலிக் கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை என் மண் என்மக்கள் யாத்திரையில் பங்கேற்கும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வழங்கி அழைப்பு விடுப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, புதுக்கோட்டை நகர் பகுதியான திருவப்பூர் ரயில்வே கேட் அருகே, கொடி கம்பத்தில் கொடி கிழிக்கப்பட்டு இருந்ததால் அந்த கொடியை மாற்றும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் கிழிந்த பழைய கொடியை அகற்றிவிட்டு புதிய கொடியை ஏற்றக்கூடாது என்று கூறி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அங்கு திரண்டனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில், காவல்துறையிடம் அனுமதி பெற்று கொடியை ஏற்ற வேண்டும் என்றும், அதுவரை கொடி ஏற்ற அனுமதி இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் பேசியதாவது, "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபயணம் ஏற்று மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வரும் 5ஆம் தேதி விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரிலும், 6ஆம் தேதி கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

மாநில தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களில், பொதுமக்கள் சார்பில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டைக்கு வருகை தருவதை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் பொதுமக்களிடம் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டு செல்கின்றனர். திமுகவைப் போன்று தலைவர்கள் வரும் போது 200 ரூபாய் பணம், பிரியாணி கொடுத்து அழைத்து வருவது என்பது பாஜகவிற்கு வழக்கமில்லை.

மேலும், தன்னெழுச்சியாக வரக்கூடிய பொதுமக்களை, நிகழ்ச்சியை காண செய்வதற்காக, பாஜக நிர்வாகிகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக மாநில தலைவரின் அறிவுறுத்தலின்படி, அவர் வீட்டில் இருந்த கொடிக் கம்பம் அகற்றப்பட்டதன் எதிரொலியாக, இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரை தமிழக முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் பாஜக கொடிகளை ஏற்ற வேண்டும் என்ற அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக கொடி ஏற்றுவதற்காக முறைப்படி காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று கொடியேற்றும் போது திடீரென காவல் துறையினர், கொடியேற்ற அனுமதி இல்லை என்று கூறி அனுமதி மறுத்து விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாஜக கொடி ஏற்றக்கூடாது என்ற தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். கொடியேற்றும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று திமுக அரசு முயற்சிக்கும் என்றால், பாஜகவினர் முன்பை விட அதிவேகமாக தான் செயல்படுவார்கள்.

மேலும், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தொண்டர்கள் ஈடுபட்டு விட்டார்கள். இந்த நாட்டில் காவல்துறை மற்றும் ராணுவத்திற்குரிய மரியாதை கொடுக்கும் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருந்து வருகிறது. எனவே காவல் துறையின் மீது எங்களுக்கு எந்த வித கோபமும் இல்லை.

திமுகவிற்கு பயந்தோ, காவல்துறைக்கு பயந்தோ இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஒத்திவைக்கவில்லை. எங்களது மாநில தலைவர் வரும் சமயத்தில், அவருடைய வருகைக்கான பணியை செய்ய வேண்டி இருப்பதால் தற்சமயம் இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளோம். நீதிமன்றம் வரை சென்று, உரிய அனுமதி பெற்று பாஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சியை செய்து முடிப்போம்.

பாரதிய ஜனதா கட்சி கொடி பறக்கும் போது திமுகவிற்கு அடிவயிறு எரிகிறது. 100 சதவீதம் பாஜகவை கண்டு திமுக பயப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட புதிய பல் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு, இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலனில்லாமல் உள்ளது.

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக எங்கே கமிஷன் வாங்கலாம், அதை யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். மக்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பாஜகவை பொறுத்தவரை இந்த ஆட்சியில் எதுவும் நியாயமாக நடக்கும் என்று நம்பவில்லை. திமுக பொருத்தவரை டாஸ்மாக்கை திறப்பது தான் முனைப்பாக உள்ளனர். டாஸ்மாக்கை திறப்பது என்றால் அதிகாரிகளும் உடனடியாக அந்த பணியை செய்து முடிக்கின்றனர்.

மேலும், பல் மருத்துவக் கல்லூரியை உடனடியாக திறக்கப்படவில்லை என்றால், பாஜக மாநில தலைவர் தலைமையில், மிகப்பெரிய போராட்டம் நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: என்.எல்.சி. பாய்லர் வெடி விபத்து: 10 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.