ETV Bharat / state

'பாஜக காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக’ - சீமான் தாக்கு

author img

By

Published : Mar 19, 2021, 8:32 AM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சீமான், ‘'பிஜேபி காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பிஜேபி’ என விமரசித்தார்.

'பாஜக காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக’ - சீமான் பேச்சு!
'பாஜக காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக’ - சீமான் பேச்சு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் கபூரை ஆதரித்து, சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, ”பாரதிய ஜனதாவும் காங்கிரஸூம் மட்டுமே இந்தியாவை ஆளும் என்பதை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி பிறக்கும். கல்வித் தரத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று கூட மோடிக்கு தெரியாது. கேடுகெட்ட கூட்டத்திடம் நாட்டைக் கொடுத்துவிட்டு மக்கள் சிக்கிக்கொண்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழ்நாட்டில் சீமானும் மட்டுமே சரியான நபர்கள்.

சிஐஏ குறித்து பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோரை பேசச் சொல்லுங்கள். அவர்களுக்கு பேசத் தெரியாது. வேளாண் சட்டத்தை நல்ல சட்டம் என்று ஒருவர் (பழனிசாமி) கூறுகிறார். கேட்டால் அவர் விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார். இப்படி யாராவது பேசுவார்களா? அப்போது போராடிக் கொண்டிருப்பவர்கள் பைத்தியக்காரர்களா? மதம் அரசை ஆளக்கூடாது, மனிதன்தான் அரசை ஆள வேண்டும்.

காங்கிரஸ் நரசிம்மராவின் ஆட்சியில்தான் பாபர் மசூதியை பாஜகவைச் சேர்ந்தவர்கள் இடித்தனர். ஏன் தடுக்கக்கூடிய ராணுவம் இருந்தும் காங்கிரஸ் தடுக்கவில்லை? இரண்டு கட்சிக்கும் கொள்கை ஒன்றுதான். 'பாஜக காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக'.

நான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களைக் கொண்டு நெய்தல் படை என்ற ஒரு ராணுவப் படையை உருவாக்குவேன். அந்தப் படகில் கையெறி குண்டுகளுடன் வீரர்கள் மீன்பிடி படகுகளுடன் செல்வார்கள். சிங்களன் தொட்டால் அவனை தூக்கு என்று உத்தரவிடுவேன். இதை உலகப் பிரச்னையாக மாற்றுவேன். ஆட்சியாளர்களுக்கு கடந்தகால காயமும் இல்லை, எதிர்கால கனவும் இல்லை. நிகழ்காலத்தின் தேடல் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. பாஜகவிடம் இந்தியாவை ஆள கொடுத்துவிட்டீர்கள். இந்த நாட்டை அது பிச்சைக்கார நாடாக மாற்றி விட்டது. வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவே இல்லை.” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.