புதுக்கோட்டையில் வீட்டில் தூங்கிய குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 14, 2024, 5:53 PM IST

police investigating the child body found in a water tank while sleeping at home in Pudukkottai

Pudukkottai child death news: வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தூங்கிய குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை: கே.புதுப்பட்டி அருகே உள்ள கரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் - வீராயி தம்பதியரின் மகன் மோகன் (35). இவர் வெளிநாடு சென்று வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பிய நிலையில், நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த, தற்பொழுது சென்னை மணலியில் வசிக்கும் நிவேதா (25) என்ற பெண்ணை, கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான 8 மாதங்களில் தம்பதிக்கும், நிவேதாவின் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நிவேதா பெற்றோருடன் வசித்து வருகிறார். மோகன் - நிவேதா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மோகனை பிரிந்து செல்லும் பொழுது நிவேதா கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், மோகன் 3 ஆண்டுகள் கழித்து வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த செண்பகவள்ளி என்ற கிருத்திகாவை இரண்டாவதாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால், அது முடியாமல் போய்விட்டது.

ஆனால், தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளாமல் மோகனும், கிருத்திகாவும் லிவிங் தம்பதியாக கடந்த ஓராண்டாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கரையப்பட்டியில் உள்ள மோகன் வீட்டில் மோகன் - கிருத்திகா மற்றும் மோகனின் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 35 தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தையுடன் கரையப்பட்டியில் உள்ள மோகன், அவர்களது பெற்றோருடன் கிருத்திகாவும் வசித்து வந்துள்ளார். மோகனின் பெற்றோர், மகள்களுக்கு பொங்கல் சீர் கொடுக்கச் சென்றிருந்த நிலையில், வீட்டில் மோகன் - கிருத்திகா மற்றும் 35 நாட்கள் ஆன ஆண் குழந்தை இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.12) மோகனும், குழந்தையும் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கிருத்திகா அதே அறையில் உள்ள கழிவறைக்குச் சென்று விட்டு வந்து பார்த்த பொழுது, குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருத்திகா மோகனிடம் கேட்டபோது, அவருக்கும் தெரியவில்லை என்று கூறி, இருவரும் வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் சென்று பார்த்தபோது, குழந்தை கழுத்தில் காயங்களுடன் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோரான மோகனும், கிருத்திகாவும், உடனடியாக குழந்தையை மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததையடுத்து, குழந்தையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கே.புதுப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வீட்டில் தூங்கிய குழந்தை மேல்நிலை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது எப்படி, குழந்தையைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசியவர்கள் யார், எதற்காக கொன்றார்கள், வீட்டில் குழந்தையின் பெற்றோரான மோகன் மற்றும் கிருத்திகா இருந்த நிலையில், மேல்நிலை தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்தது எப்படி, குழந்தையின் கழுத்தில் காயம் இருந்ததால், குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை இளம்பெண் ஆணவக் கொலை - பெண்ணின் பெற்றோர் உள்பட 8 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.