ETV Bharat / state

புலி வருது..! புரளியால் பெரம்பலூர் மக்கள் பீதி; வனத்துறை விளக்கம்!

author img

By

Published : Dec 12, 2022, 7:57 AM IST

கொட்டரை பகுதி அருகே சிறுத்தை புலி போன்ற விலங்கு தென்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய புரளியால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

புலி வருது..! புரளியால் மக்கள் பீதி
புலி வருது..! புரளியால் மக்கள் பீதி

பெரம்பலூர்: கொட்டரை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை என்பவர் கொட்டரை கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு மனைவியுடன் சென்றுள்ளார். அவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுது, புதர்கள் நிறைந்த பகுதியில் தூரத்தில் புதிதாகவும், வித்தியாசமாகவும், அவர் இதுவரை பார்த்திராத விலங்கு ஒன்றினை பார்த்துள்ளார். அது பார்ப்பதற்குச் சிறுத்தைப் புலி போலத் தெரிந்துள்ளது.

இதனையடுத்து அந்த பகுதிக்குச் சென்று பார்த்த பொழுது அதன் காலடித்தடம் தெரிந்துள்ளது. அந்த காலடி தடத்தினை தனது செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட அழகுதுரை இதுகுறித்து கிராம மக்களிடையே தகவல் தெரிவித்துள்ளார். அதனை பார்த்த சிலர் அது சிறுத்தை புலியின் காலடி தடம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தகவல் காட்டு தீ போல ஆதனூர், கொட்டரை, குரும்பாபாளையம் மற்றும் பெரியம்மாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதோடு ஆடு மாடுகளையும் அந்த பகுதிக்குள் விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் இந்த பகுதி கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைக் குறைக்க தமிழக, அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அழகுதுரையிடம் கேட்ட போது, நானும், மனைவியும் வயலுக்குச் சென்ற பொழுது தொலைவில் புதிதாக நான் இதுவரையில் கண்டிராத ஒரு விலங்கினத்தை பார்த்தேன். அது பார்ப்பதற்குச் சிறுத்தைப் புலி போல தோன்றியதால் எனக்கு அச்சம் ஏற்பட்டது. இது குறித்து பொது மக்களிடையே தெரிவித்தேன் என்றார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் வனத்துறை துறையினர் நேரில் சென்று காலடித்தடத்தை ஆய்வு செய்து, அது காட்டில் வாழும் புனுகு பூனையின் காலடித்தடம் என்று தெரிவித்தனர். இருப்பினும் காலடித்தடத்தினை பதிவு செய்து அதனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவிக்கையில்,”இது புனுகு பூனையின் காலடித்தடமாகத் தான் இருக்க வேண்டும். இந்த பகுதியில் சிறுத்தை புலி தங்கி இருக்குமேயானால் அது கால்நடைகள் அல்லது மனிதர்களை வேட்டையாடி இருக்கும். அது போல சம்பவங்கள் ஏதும் இல்லை.

எனவே கட்டாயமாக புனுகு பூனையைத் தவிர வேறு எந்த விதமான விலங்கினமும் இந்த பகுதியில் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..? முதலமைச்சர் முடிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.