ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மாணவியின் பெற்றோரை சந்தித்த பாலகிருஷ்ணன்

author img

By

Published : Jul 18, 2022, 10:55 AM IST

Updated : Jul 18, 2022, 4:16 PM IST

கள்ளக்குறிச்சி, தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ள நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி கடந்த ஜூலை.13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த ஸ்ரீமதியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(ஜூலை.17) மாணவி உயிரிழந்த பள்ளியில் வன்முறை வெடித்து 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு பெரிய கலவரம் வெடித்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் ராமலிங்கம்-செல்வி தம்பதிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்

சிகிச்சை பெற்று வரும் ராமலிங்கம்-செல்வி தம்பதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாணவி உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என்றும், உரிய நியாயம் கிடைக்கும் என்றும் அவர் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், வன்முறை சம்பவத்திற்கு பொதுமக்களும் அரசும் காரணம் என்று கூற முடியாது. அமைதியான முறையில் கூடியிருந்த பொதுமக்கள் திடீரென ஆவேசப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாடு அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மாணவியின் பெற்றோரை சந்தித்த பாலகிருஷ்ணன்

இந்த கலவர சம்பவத்தில் ஈடுபட்ட அவர்களை முறையாக கண்டுபிடித்து குற்றவாளிகளை மட்டும் கைது செய்ய வேண்டுமே தவிர அப்பாவிகள் மாணவர்கள் வேடிக்கை பார்க்க சென்ற பொதுமக்கள் என்று யார் மீதும் வழக்கு தொடுக்கக்கூடாது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் செல்வி, "எங்களது மகள் உயிரிழப்பு என்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகம் முறையாக செயல்படவில்லை, சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை, எங்களுக்கு நியாயம் வேண்டும். அமைதியாக போராடிய பொதுமக்களுடன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட ஆட்கள் தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது திட்டமிட்டு பள்ளி நிர்வாகம் செய்த செயல் என்றும், கடந்த மூன்று நாளாக போராடிவரும் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும் நியாயம் கிடைத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும் செல்வி தெரிவித்தார்.

நியாயத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களும் மாணவர்களும் வன்முறையை கைவிட்டு அமைதியான முறையில் நீதிக்காக போராட வேண்டும், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: போர்க்களமாக மாறிய போராட்டம்... பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்!

Last Updated : Jul 18, 2022, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.