ETV Bharat / state

நாமக்கல் எஸ்ஐ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - ரூ.1.74 லட்சம் பறிமுதல்

author img

By

Published : Jun 29, 2023, 9:35 AM IST

நாமக்கல்லில் எஸ்ஐ வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது.

எஸ் ஐ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
எஸ் ஐ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

எஸ் ஐ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

நாமக்கல்: நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூபதி. இவர் நாமக்கல்லில் உள்ள திருநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டில் நேற்று (ஜூன் 28) காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையிலான காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வீட்டில் உள்ள கணினி மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய இந்த சோதனை, மாலை 6 மணி வரை நீடித்தது. சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 74 ஆயிரம் பணம், வங்கிக்கணக்கு மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதே போல் மல்லசமுத்திரம் கீழ்முகம் கிராமத்தில் உள்ள உள்ள எஸ்ஐ பூபதியின் தந்தை தங்கவேலுக்கு சொந்தமான வீட்டிலும், வெண்ணந்தூர் அருகே உள்ள கல்கட்டானூர் பகுதியில் வசித்து வரும் பூபதியின் மாமனார் செங்கோட்டையன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த இரு வீடுகளில் சுமார் 8 மணி நேரம் நீடித்த சோதனையில் ஆவணங்களை மட்டும் போலீசார் எடுத்து சென்றனர். எஸ்ஐ பூபதி கடந்த 2018ஆம் ஆண்டில் ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது திண்டுக்கல்லைச் சேர்ந்த அட்ரின் போஸ்கோ என்பவர் ஜெயராஜனின் மகன் சக்திவேலுக்கு வேலை வாங்கித் தருவதாக 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும், அவரது உறவினர் வெற்றிவேலுக்கு வேலை வாங்கித் தருவதாக 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதே போல் ஜெயராஜன் பங்குதாரராக உள்ள நிதி நிறுவனத்தில், அட்ரின் போஸ்கோ 2 கார்களின் ஆவணங்களை அடகு வைத்து 10 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், அவரது மனைவி பெயரில் உள்ள நில ஆவணத்தை வைத்து 3 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது. எனவே அட்ரின் போஸ்கோவிடம் இருந்து வர வேண்டிய சுமார் ரூபாய் 30 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுத்தர கோரி, ஜெயராஜன் என்பவர் எஸ்ஐ பூபதியிடம் முறையிட்டு உள்ளார்.

இந்தப் பிரச்னையை முடித்து வைக்க எஸ்ஐ பூபதி ஜெயராஜனிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக பணம் கேட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முதல்கட்டமாக ஜெயராஜன் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உள்ளார். இருப்பினும், அட்ரின் போஸ்கோவிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனமுடைந்த ஜெயராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் 2020ஆம் ஆண்டில் புகார் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், பூபதி மீது வழக்குப் பதிவு செய்து, நேற்று அவரது வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது:சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் அலெர்ட் செயலி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.