ETV Bharat / state

கரோனா தொற்றுப் பாதித்த விதவைப் பெண்ணின் குழந்தைகளை பாதுகாக்கும் அரசு

author img

By

Published : Jul 10, 2020, 8:15 PM IST

நாமக்கல்: கரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளான விதவைப் பெண்ணின், 2 பெண் குழந்தைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவும் பாதுகாப்பு அளிக்கவும் அரசு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை
பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த குப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் கணவனை இழந்து தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவருடன் பணியாற்றி வந்த சிலருக்கு நேற்று (ஜூலை 9) கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 10) இப்பெண்மணிக்கும், கரோனா தொற்று உறுதியாகி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கணவனை இழந்து வாழும் இப்பெண்ணுக்கு 17 மற்றும் 16 வயதில் இரு மகள்கள் உள்ளனர். உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உணவுக்கு வழியின்றி தாங்கள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகள் வழங்குமாறு சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர். சரோஜாவை தொலைபேசி வாயிலாக இரு இளம் பெண்களும் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அமைச்சர் சரோஜா மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு சிறுமிகளுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.

மேலும் இவர்களுக்கு சேந்தமங்கலம் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க காவல் ஆய்வாளர் சுகுமாரிடம் கேட்டுக் கொண்டார். இதன் பேரில் காவல் துறையினர் இரவு நேரத்தில் அப்பெண்கள் வசிக்கும் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்குவதாக ஆய்வாளர் உறுதி அளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.