ETV Bharat / state

குடியரசு தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டது ஏன்? - முத்தரசன்

author img

By

Published : Jun 25, 2022, 11:13 AM IST

பாஜக சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டுமென்று யஷ்வந்த் சின்காவை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டுமென்று யஷ்வந்த் சின்காவை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்
சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டுமென்று யஷ்வந்த் சின்காவை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, "ஆகஸ்ட் 9ஆம்தேதி விடுதலை போராட்டத்திற்காக வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை முன்வைத்த நாளில் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் இறுதி நாளான 9ஆம்தேதி மக்கள் விரோத ஜனநாயக விரோத பாசிச மோடி அரசே வெளியேறு என்ற கோஷத்தை பேரணியில் முன்வைக்க இருக்கிறோம்.

கடந்த 8 ஆண்டுகளில் சாதாரண மக்கள், சிறு,குறு தொழில் உள்ளிட்ட அனைவரின் நலனை புறக்கணித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகியவை தனித்தன்மையோடு சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்புகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு ஜனநாயக விரோதமான முறையில் செயல்படும் மத்திய அரசை வெளியேற்று என்ற முழக்கத்தை இந்தியாவில் தமிழ்நாட்டில் முதன்முறையாக வைக்கிறோம்.

சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டுமென்று யஷ்வந்த் சின்காவை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, பேரிடர் நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்கவில்லை. அப்படிபட்ட சூழலிலும் தமிழக முதலமைச்சர் சிறப்பான ஆட்சியை நடத்திவருகிறார். திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த பல திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது. அதற்கான இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி ஜனநாயக பூர்வமாக எதையும் செய்வதில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைக்கு எடுக்கிறோம் என்கிறார்கள். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நாடே அக்னியாகி கொண்டு இருக்கிறது. இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டும். ராணுவ தளபதிகளை கொண்டு அக்னிபத் திட்டத்திற்காக பேட்டி கொடுக்கசொல்வது இதுவரை நடைமுறையில் இல்லாதது.

மக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையேயான மோதலை மத்திய அரசு உருவாக்குகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக சுயசிந்தனையோடும். புத்தியோடும் செயல்பட்டது. தற்போது அதிமுக சுயமாக செயல்படவில்லை. யாரோ இயக்குகிறார்கள். இயக்குகிறவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏற்ப அந்த கட்சி இருக்கும்.

குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி திரவுபதி முர்முவை அறிவித்திருக்கிறார்கள். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டுமென்று அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கக்கூடியவர் குடியரசுதலைவராக வரவேண்டும் என்பதற்காக யஷ்வந்த்சின்காவை எதிர்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அனைத்து எதிர்கட்சிகளும் யஷ்வந்த் சின்காவை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொள்கிறது" என முத்தரசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கப் போவது முதலமைச்சர் ஸ்டாலின் தான்"-அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.