ETV Bharat / state

'ஒன்றிய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் திமுக'

author img

By

Published : Oct 2, 2021, 7:46 PM IST

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களைத் திசைதிருப்புவதற்காக ஒன்றிய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருவதாக பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சையது இப்ராஹிம்
செய்தியாளர்களைச் சந்தித்த சையது இப்ராஹிம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் சென்றார். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளைச் சந்தித்து அருளாசிப் பெற்றார்.

இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், “தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சிக்காகப் பல முயற்சிகள் எடுத்துவருகிறேன். தமிழ்நாட்டில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டு பாஜகவை மதவாத கட்சி என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் பொய்ப் பரப்புரை செய்துவருகின்றன.

இந்தப் பரப்புரை வலுவடைந்தால் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு இடையேயான நல்லிணக்கம் கெட்டுவிடும். பாஜக சிறுபான்மை அணி சார்பில் மதநல்லிணக்கத்தை முன்னெடுத்துவருகிறோம். அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து நல்லிணக்கக் கருத்துக்கள் குறித்துப் பேசினோம்.

ஒன்றிய அரசை இழிவுப்படுத்தும் திமுக

பாஜக மதம், மொழி, சாதி அரசியலை முன்னெடுக்கவில்லை. மக்களுக்கு மத்தியில் சமத்துவத்தைப் போதிக்க வேண்டுமென்பதுதான் எங்களது கொள்கை. அனைத்து மக்களின் முன்னேற்றத்தைக் கொண்டுதான் இந்த நாடு வலுப்பெற வேண்டும்.

எந்த மத பாகுபாடும் இல்லை என்று பாஜக கூறிய பிறகும் திமுக அரசு, ஒன்றிய அரசை இழிவுப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடக்கூடியவர்களுக்கு மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசுக்கு எதிரான பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகள் ஊக்கம் பெற்றிருக்கின்றன. அவர்களுடைய பேச்சு ஒன்றிய அரசை இழிவுப்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது.

இதனைத் தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கிறது. முதலமைச்சர் இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்ற நிலைமாறி, மதக் கலவரத்தை உருவாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மக்களைத் திசைதிருப்பும் திமுக

இந்து மத நம்பிக்கையை இழிவுப்படுத்துவது, வழிபாட்டை கிண்டல், கேலி செய்வதை இஸ்லாமியர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு ஆன்மிக பூமி, அமைதி பூமி என்பதை நிலைநிறுத்த முடியும். அரசியல் வாக்கு வங்கிக்காக திமுக அரசு தவறான நடவடிக்கையை மேற்கொள்ளுமேயானால் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்.

செய்தியாளரைச் சந்தித்த சையது இப்ராஹிம்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் மாதந்தோறும் ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துகளை எடுத்துக்கூறி மக்களைத் திசைதிருப்பும் முயற்சியைத்தான் திமுக செய்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தலைவர்கள் பரப்புரை செய்யும்போது காவல் துறையை வைத்து நெருக்கடி கொடுப்பது போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தமிழ்நாடு ஆன்மிக பூமியாக இருக்கப் பாடுபடுவோம்” என்றார்.

இதையும் படிங்க: கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.