ETV Bharat / state

"உதயநிதி சொல்ற கதைக்கெல்லாம் நீதிமன்றத்தில் இருந்து பதில் வரும்" - வானதி சீனிவாசன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 4:31 PM IST

Vanathi srinivasan: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்போது தான் கதை சொல்ல ஆரம்பித்து இருக்கிறார் என்றும் அவர் சொல்கிற கதைகளுக்கு எல்லாம் நீதிமன்றத்தில் இருந்து பதில் வரும், தான் கோயிலில் இருப்பதால் அவர்களை வேறு மாதிரி சொல்ல விரும்பவில்லை என்று கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கணவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு கோயிலில் வானதி சீனிவாசன் வழிபாடு
கணவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு கோயிலில் வானதி சீனிவாசன் வழிபாடு


மயிலாடுதுறை: திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார்.

கணவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு கோயிலில் வானதி சீனிவாசன் வழிபாடு

கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கோயிலுக்கு வந்த வானதி ஸ்ரீனிவாசனுக்கு பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அதைத தொடர்ந்து ஆலயத்தில் கஜ பூஜை, கோ பூஜை செய்து, ஸ்ரீஅபிராமி சன்னதியில் கணவருடன் தரிசனம் செய்தார்

பின்னர், ஸ்ரீ அபிராமி சன்னதியில் வழிபாடு மேற்கொண்ட வானதி - சீனிவாசன் தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டு 60 வயது பூர்த்தி விழாவை கொண்டாடினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஆனாலும் காவிரி நீர் கிடைக்காமலும் பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடுமையான துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்.

அதை விடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் அறிக்கை விடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை.

மாநில அரசின் மெத்தனப் போக்கினால் மத்திய அரசின் திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதை உயர்த்தி வழங்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின், மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் இயக்க‌ வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை முன்வைக்கிறேன்" என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூட்டு, சாவி கதை சொல்லியது விமர்சனம் ஆன நிலையில், அது குறித்து கேள்விக்கு, "அமைச்சர் உதயநிதி இப்போது தான் கதை சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். அதனால் கொஞ்சம் கொஞ்சமா நிறைய கதை சொல்லட்டும் சொல்ற கதைகளுக்கெல்லாம் நீதிமன்றத்தில் வேறு மாதிரி பதில் கிடைக்கு" என்றார்.

மேலும் பேசிய வானதி சீனிவாசன், "தற்போது நான் கோயிலில் இருப்பதால் அவர்களை வேறு மாதிரி சொல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.‌ செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: “இது என்கவுண்டர் இல்லை..தற்காப்பு” - ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் குறித்து திருச்சி எஸ்பி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.