ETV Bharat / state

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு.. சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலம்!

author img

By

Published : Jan 27, 2022, 2:50 PM IST

சீர்காழி அருகே தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படும் திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் திருக்குடமுழுக்கு விழாவில், தருமை ஆதினம் உள்ளிட்ட நான்கு ஆதீன குருமகா சன்னிதானங்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

thirumullaivasal Mullaivananathar temple kumbabhishekam
thirumullaivasal Mullaivananathar temple kumbabhishekam

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படும் திருமுல்லைவாசல் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்திற்குள்பட்ட அணிகொண்ட கோதை அம்பாள் சமேத முல்லைவன நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று (ஜன.27) திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

இது, சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் திருகுடமுழுக்கை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு

விமான கலசங்களில் புனித நீர்

அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்கக் கோயிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர்
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர்

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் கந்த பரம்பரை 28ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சக்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்கச் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி திருகுடமுழுக்கை நடத்தி வைத்தனர்.

தல வரலாறு சிறப்பு

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்தப் பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது.

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு

எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது.

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு

அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய மன்னன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான்.

உடனே ஈசன் பார்வதியுடன் காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம். சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு

திருகுடமுழுக்கில் சிதம்பரம் மௌன குருசாமிகள், தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருகுடமுழுக்கை முன்னிட்டு சீர்காழி காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துணையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு

கோயிலுக்குள்ளும் வெளியையும் பக்தர்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்களும் காவல்துறையினரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: சென்னை வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.