ETV Bharat / state

காவிரி நீர் கடைமடையை அடைந்தும் காயும் விவசாய நிலங்கள்.. அய்யாவையனாறு பகுதி விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Jul 15, 2023, 2:00 PM IST

மேட்டூர் அணை திறந்து ஒரு மாதத்தை கடந்தும் அய்யாவையனாற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் காவிரி நீர் இன்றி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் வராததால் விவசாயிகள் வேதனை
விவசாயத்திற்கு நீரின்றி தவிக்கும் 50 கிராமங்கள்

விவசாயத்திற்கு நீரின்றி தவிக்கும் 50 கிராமங்கள்! மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் வராததால் விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக் கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நடப்பாண்டு ஜுன் 12ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 93 ஆயிரத்து 711 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, 45, 53, கோ 51, அம்பை 16 போன்ற குறுகிய கால நெல் ரகங்களை வாங்கிய விவசாயிகள், நிலத்தில் பாய் நாற்றங்கள் செய்து விதையிட்டனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று விட்டதாக தெரிவித்தனர். ஆனால், குத்தாலம் அருகே காவிரி ஆற்றில் இருந்து பிரியும் முக்கிய பாசன ஆறான அய்யாவையனாறு வழியாக கொண்டல், கீழமருதாந்தநல்லூர், திருநன்றியூர், கீழையூர் வழியாக மீண்டும் காவிரி ஆற்றில் இணையக் கூடிய வகையில் அய்யாவையாறு உள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்!

ஓர் ஆண்டை கடக்கும் சீரமைக்கும் பணி: அய்யாவை ஆற்றில் பல்வேறு பகுதிகளில் கரைகள் பலப்படுத்துவதற்கான தடுப்புச் சுவர்கள், பழுதடைந்த சட்டர் சீரமைக்கும் பணிகள் ரூ.93 கோடியே 13 லட்சம் மதிப்பில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. கரைகளில் பதிப்பதற்கான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த ஆண்டு முதல் கொற்கை கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

பாதிப்புக்குள்ளாகும் விவசாய கிராமங்கள்: மேட்டூர் அணை திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அய்யாவையனாற்றில் பணிகள் முடிவடையாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அய்யாவையனாற்றில் இருந்து பிரிந்து செல்லும் பண்டாரவாடை வாய்க்கால், விக்ரமன் ஆறு, தலைஞாயிறு வாய்க்கால், வரகடை வாய்க்கால் உள்பட பல்வேறு கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் வருவதற்கு வழி இல்லை.

இதனால் திருமங்கலம், காளி, ஐவநல்லூர், கொற்கை, தாழஞ்சேரி, வரகடை, கள்ளிக்காடு, பாலாகுடி, வில்லியநல்லூர், கொண்டல், மருதாந்தநல்லூர், கங்கணம்புத்தூர், ஆனந்ததாண்டவபுரம், திருநன்றியூர் உள்பட அய்யாவையனாற்றை நம்பி பாசன வசதி பெறும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆற்று நீர் எட்டிக்கூட பார்க்காத நிலை இருந்து வருகிறது.

கேள்விகுறியான குறுவை சாகுபடி: மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சரிந்து வருவதால் குறுவைக்கு ஆற்று நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வந்ததும் அய்யாவையனாறு உள்பட கிளை ஆறுகளில் தண்ணீர் திறந்து விட்டிருந்தால் ஓரளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பம்பு செட் நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்தவர்களுக்கு கொஞ்சம் பயன் உள்ளதாக அமைந்திருக்கும்

விவசாயிகள் வேதனை: கரை பலப்படுத்துவது, சட்டர் அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்காமல் கிடப்பில் போட்டதால் அய்யாவையனாற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என விவசாயிகள் கவலையுடன் குற்றம் சாட்டினர். மேட்டூர் அணை திறந்த பின்னரே தூர்வாரும் பணி, கரை பலப்படுத்துதல், சட்டர் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வது பொதுப்பணித் துறையினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

தண்ணீர் வந்தால் பணிகளை அரைகுறையாக செய்துவிட்டு வேலை முடிந்ததாக கணக்குகாட்டி செல்வது வழக்கமாக உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி அய்யாவையனாற்றில் கரை மற்றும் சட்டர் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.