ETV Bharat / state

மயிலாடுதுறையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு!

author img

By

Published : Oct 16, 2022, 10:54 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

Etv Bharat
Etv Bharat

மயிலாடுதுறை: குறுவை சாகுபடி நடந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதத்தை 17 சதத்திலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல்லின் மாதிரிகளை சேகரித்தனர். பாண்டூர் விவசாயி பழனி என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லில் 19 விழுக்காடு ஈரப்பதம் இருந்தது சோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மணல்மேடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லின் தரம், ஈரப்பதம் மற்றும் விவசாயிகளின் குறைகளை அலுவலர்கள் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக்குழு ஒருங்கிணைப்பாளர் கான், மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ‘தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை குறைக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.