ETV Bharat / state

பெண்ணின் தாலிச்செயினை பறித்த சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது!

author img

By

Published : May 11, 2023, 9:01 AM IST

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய சிறுவன் உள்ளிட்ட மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

6 பவுன் தாலிச்செயினை பறித்து தப்பிய சிறுவன் உட்பட 3 பேர் கைது!
6 பவுன் தாலிச்செயினை பறித்து தப்பிய சிறுவன் உட்பட 3 பேர் கைது!

பெண்ணின் தாலிச்செயினை பறித்த சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் பிரதான சாலையில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி வேலையை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் ஜெயகோபி வருவதாக கூறியிருந்ததால், சீனிவாசபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் அவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இளவரசியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில், மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே சேத்தூர் புது தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் (வயது 18), காரைக்கால் கடலூர் வடக்கு தெருவை சேர்ந்த, தெய்வசிகாமணி மகன் பாபிலோன் ராஜ் (வயது 20) மற்றும் காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரையும் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் முன்னிலையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை போலீசார் ஸ்ரீராம், பாபிலோன்ராஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், மற்றொரு குற்றவாளியான 17 வயது சிறுவன் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: எனது தற்கொலைக்கு அமைச்சர் சேகர்பாபு தான் காரணம்.. மகள் பரபரப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.