ETV Bharat / state

கல்வி உதவித் தொகை ரத்து முடிவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

author img

By

Published : Dec 1, 2022, 11:26 AM IST

எட்டாம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரத்து உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

கல்வி உதவித் தொகை ரத்து முடிவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
கல்வி உதவித் தொகை ரத்து முடிவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

மதுரை: சிறுபான்மை மாணவர்களுக்கு மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித் தொகை (Pre Matric Scholarship) இது நாள் வரை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. இன்று (டிச.1) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 1 முதல் 8 ஆவது வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இனி வழங்கப்படாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதற்கான காரணமாக, கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி நடுநிலைக் கல்வி வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச, கட்டாய கல்வி வழங்கப்படுவது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே கல்வி உதவித் தொகை இனி 9 மற்றும் 10 ஆவது வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு மேற்கண்ட வகுப்புகளுக்கு தரப்பட்டு இருந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக அறிய வருகிறேன். இது சிறுபான்மை சமூகங்களை சார்ந்த ஏழை, அடித்தள மக்களுக்கு பலத்த அடியாகும். இந்த திட்டம் மாணவர்கள் / பெற்றோர்கள் செலுத்துகிற கட்டணங்களை மட்டும் ஈடுகட்டக் கூடியது அல்ல. உங்கள் அமைச்சகத்தின் இணைய தளத்திலேயே இந்த திட்டம் பற்றி மிகத் தெளிவான முன்னுரை தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதோ அந்த வார்த்தைகள், "மெட்ரிக்குக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டம் என்பது பள்ளிக் கூடத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிப்பது ஆகும். அவர்களின் பள்ளிக் கல்விக்கான நிதிச் சுமையை குறைத்து, பள்ளிக் கல்வியை முடிக்க உதவுவது ஆகும். இது அவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து போட்டி மிக்க வேலைச் சந்தையில் சமதள ஆடுகளத்தை உறுதி செய்வது ஆகும். கல்வி மூலம் அதிகாரப்படுத்தல் என்பது இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. சிறுபான்மை சமூகங்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் சக்தி கொண்டது".

இது கல்விக் கட்டணத்தை மட்டும் பேசவில்லை. அதன் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. அதன் நோக்கம் மிக விரிந்தது. இருந்தாலும் உங்கள் முடிவு எண்ணங்களுக்கு மாறானதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை சமூகங்களை சார்ந்த ஏழை, அடித்தள மாணவர்கள் பொருளியல், சமூக, கல்வி தளங்களில் பின் தங்கியுள்ளனர். அதற்கு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும், பாரபட்சங்களும் காரணம். இந்த திட்டங்கள் அம்மக்களின் வாழ்நிலை குறித்த ஆழ்மான ஆய்வுகளின் பின்புலத்தில் கொண்டு வரப்பட்டன. சச்சார் குழு அதற்கான ஆதார தரவாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

கல்விக் கட்டணம் தவிர்த்து, பெற்றோர் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, போக்குவரத்து, கல்விச் சுற்றுலா போன்றவற்றிற்கு செலவிட வேண்டியுள்ளது. இலவச உணவுத் திட்டங்கள் அரசுப் பள்ளியில் நடைமுறையில் இருந்தாலும் தனியார் பள்ளிகளில் இல்லை. அது போல அரசுப் பள்ளி மாணவர்களும் பிரத்தியேக பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என கூறியுள்ளார். விளிம்பு நிலைச் சமூகத்து மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு சமதள ஆடுகளத்தை இந்த சமூகம் தரவில்லை என்பதே உண்மை. இதற்கு அரசுதான் ஆதரவு நல்க வேண்டும். அது அரசின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ காரணம் காண்பித்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையை திரும்பப் பெறுவது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும் எனவும் இது கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்கையே எட்ட விடாமல் தோற்கடிக்க கூடியதும் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். ஆதார, நடுநிலைக் கல்வி முழுமைக்கும் கல்வி உதவித் தொகைத் திட்டம் தொடர்வதை உறுதி செய்யுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வலையில் சிக்கிய டால்பின்; கடலில் விட்ட மீனவர்களுக்கு சுப்ரியா சாகு பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.