ETV Bharat / state

’ரஜினியின் முடிவை மக்கள் வரவேற்பார்கள்’: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Nov 29, 2020, 12:09 PM IST

மதுரை: ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்
அமைச்சர் ஆர் பி உதயகுமார்

மதுரையில் கரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம், அம்மா தொண்டு நிறுவனம் மூலம் உணவு வழங்கும் திட்டத்தின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”நிவர் புயல் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக நிவர் புயலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இயற்கை பேரிடர்களைக் கையாளுவதில் முதலமைச்சர் புதிய சகாப்தத்தை படைத்துள்ளார். புயல் காலங்களில் 24 மணி நேரமும் நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டன‌. பொதுமக்களும் 100விழுக்காடு ஒத்துழைப்பை வழங்கினர்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும் காணொலி

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த நகர்வுகள் 24 மணி நேரமும் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி வலுப்பெற்று வருகிறது. டிசம்பர் 1 அல்லது 2ஆம் தேதி புயல் வலுப்பெற்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றால் அதற்கு புரவி என பெயரிடப்பட உள்ளது. நிவர் புயல் பாதிப்பினை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தமிழக அரசு முன்வைக்கும்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,”விண்வெளியில் பரப்புரை செய்தாலும் திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலுக்காக பரப்புரை செய்பவர்கள் அதிமுகவினர் அல்ல. அதிமுக தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் எப்போதுமே மக்களை சந்திக்கும். முக.ஸ்டாலின் அறிக்கை மூலம் மக்களை திசை திருப்பி அரசின் திட்டங்களை மறைக்க முயற்சிக்கிறார். தொலைநோக்கு பார்வையில் முக.ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டும்”என்றார்.

அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

கரோனோ பாதிப்பு நேரங்களில் வேளாண் விளைச்சல் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளளதாகத் தெரிவித்த அமைச்சர் உதயகுமார், மதுரைக்கு ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கவுள்ள முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை வரும் 4ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பதாகக் கூறினார்.

ரஜினியின் நாளைய ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு, ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.