ETV Bharat / state

வல்லநாடு பாலம் தொடர்பான வழக்கு - மாவட்ட ஆட்சியர், தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Aug 7, 2021, 10:11 PM IST

நெல்லை-தூத்துக்குடி இடையேயான வல்லநாடு பாலத்தை சீரமைக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் உத்தரவிடக் கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வல்லநாடு பாலம்
வல்லநாடு பாலம்

மதுரை : தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தேசிய நெடுஞ்சாலை எண் 138 இடையே தாமிரபரணி ஆறு செல்வதால் அதனை கடந்து செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஒரு பாலமும், தூத்துக்குடியிலிருந்து நெல்லை நோக்கி வருவதற்காக ஒரு பாலமும் சுமார் 400 மீட்டர் நீளத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு கடந்த 2012 ஜூன் 8 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

அலுவலர்கள் உத்தரவாதம்

பாலம் திறப்பு விழாவின்போது, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தரப்பில், நிலநடுக்கம், வெள்ள காலங்களில் ஏற்படும் மண்ணரிப்பு ஆகியவற்றால் பாலம் பாதிக்கப்படாது என்றும், 160 டன் எடை கொண்ட கனரக வாகனங்களை தாங்கும் பலத்துடன், நூறு ஆண்டுகள் உத்தரவாதம் கொண்ட வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

பாலம் விரிசல்

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடியில் இருந்து வரக்கூடிய மற்றொரு பாலத்திலும் ஓட்டை விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

தற்போது சீரமைப்பு செய்த மற்றொரு பாலத்தின் வழியே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பொருட்களை கொண்டு பாலத்தை கட்டியதே இதற்கான காரணம். ஆகவே வல்லநாடு பாலத்தை சீரமைக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும் தரமில்லாத வகையில் பாலங்களை கண்டிய ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி ஆகியோர் அமர்வில் இன்று (ஆக.7) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றைப் பார்த்த நீதிபதிகள், " புகைப்படங்களை பார்க்கும்போது பாலம் மிக மோசமாக இருப்பது தெரிகிறது" .

இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கையிருப்பில் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.