ETV Bharat / state

உயிர்ம வேளாண் கொள்கையை மாநில அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம்

author img

By

Published : Mar 7, 2023, 11:00 PM IST

தமிழக அரசு ஒருங்கிணைந்த உயிர்ம வேளாண் கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

the-state-government-should-immediately-announce-the-bio-agriculture-policy-says-tamil-traditional-agriculture-association
Etv Bharat

மதுரை: இயற்கை சார்ந்த மரபு வேளாண் உழவர்கள், மரபு மேய்ச்சல்காரர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் பாதுகாப்புக் கொள்கை வேண்டுமென வலியுறுத்தி தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதில் பங்கேற்ற கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் தனது உரையில், 'தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் சார்பாக தமிழக அரசுக்கு உயிர்ம வேளாண் கொள்கை தொடர்பான மாதிரி வரைவறிக்கை ஒன்றை அனுப்பியது. இவ்வறிக்கை கிடைத்தவுடன் தலைமைச் செயலர் அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டு, வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு அறிவிக்க உள்ளது. ஆகையால், அந்த வரைவுக் கொள்கை தயாரிக்கும்போது தமிழர் மரபு வேளாண் கூட்டியக்கத்தின் மாதிரி வரைவுத் திட்டமும் கவனத்திற்கொள்ளப்படும் என்ற உறுதியை அவர் அளித்தனர். அந்த அறிக்கையை தமிழில் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வைத்தோம். அதற்கு இதுவரை அரசிடமிருந்து பதில் இல்லை.

உயிர்ம வேளாண்மைக் கொள்கை என்பது தனியான ஒன்றல்ல. அது கால்நடை வளர்ப்பு, சித்த மருத்துவ, மரபு மருத்துவத்தோடு தொடர்புடையதாகும் என்பதையும் நாங்கள் விளக்கிக் கூறியுள்ளோம். இயற்கை வேளாண்மை என்பது கால்நடைகளின் சாணங்களையே சார்ந்திருக்கிறது.

ஆகையால், அந்த கால்நடைகளுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய மேய்ச்சல் நிலங்களையும், மேய்ச்சல் தொழிலையும் பாதுகாத்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தால்தான் ''சாண எரு'' என்ற அடிப்படைப் பொருளே கிடைக்கும். அதுபோல நாட்டு மாடு வளர்ப்பு என்பதையும் பாதுகாத்து ஊக்கமளிக்க வேண்டியது தமிழக அரசின் முதன்மையான செயலாகும். கரோனோ பெருந்தொற்றுக்குப் பிறகு மரபு சார்ந்த விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.

மரபின ஆடு-மாடுகளையும் மேய்ச்சலில் ஈடுபடும் கிடைக்கார சமூகத்தையும் பாதுகாத்து வளர்க்க, தற்சார்பான மேய்ச்சல் சமூக மேம்பாட்டு வாரியம் உருவாக்க வேண்டும். காடுகளில் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகள் நுழைவதைத் தடை செய்து அறிவிக்கப்பட்டுள்ள வனத்துறையின் தடையாணை சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். சித்த மருத்துவத்தைப் பாதுகாத்து வளர்க்க தற்சார்பான சித்த மருத்துவ வாரியம் அமைப்பதோடு மாவட்டந்தோறும் சித்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும். செங்கல்பட்டு சித்த மருத்துவ உயராய்வு நிறுவனத்துக்கு திருமூலர் பெயர் சூட்டுவதோடு தமிழர்களின் உயிர்காப்புக் கலையான ஓகக் கலையை சித்த மருத்துவத்தோடு ஒருங்கிணைந்த உடலியல் மருத்துவமாக கற்பிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் ரசாயனம் கலந்த செயற்கையான செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை-2க்கு போட்டியாக இணையத்தில் ட்ரெண்டான வட சென்னை-2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.