ETV Bharat / state

மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 8:08 AM IST

Issue of Pregnant women death in Madurai GH: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? ஆட்சியரின் தணிக்கை அறிக்கையில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து காணலாம்.

issue of Pregnant women death in Madurai GH
மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பில் நடந்தது என்ன

மதுரை: தென் மாவட்டங்களின் தனிச் சிறப்புமிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை பல்வேறு நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாக திகழ்கிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் சமீபத்தில் இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையில், மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், பிரசவத்திற்காக மானகிரி நகர்ப்புற சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு பிரசவம் பார்ப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகக் கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் கடந்த 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்த பெண், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, அவருக்கு டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை தரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் வினோத், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்திற்கு சென்று, உயிரிழந்த கர்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விபரம் கேட்டறிந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் இருந்து கர்ப்பிணிகள் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மாதம் 2ஆம் தேதி உயிரிழந்த செம்மலர் மற்றும் 5ஆம் தேதி உயிரிழந்த குப்பி ஆகிய இரு தாய்மார்களின் உயிரிழப்புகள் குறித்து தணிக்கை ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில், உயிரிழந்த இரண்டு தாய்மார்களும் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை ஆவணங்களும், அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேற்றுத் துறையில் உயிரிழந்த பின்பு அளிக்கப்பட்ட சிகிச்சை அறிக்கையிலும் வேறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த தணிக்கை அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் மூலம், உயிரிழந்த தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படாததும், உயிரிழந்தவர்கள் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் திருத்தம் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அதன்படி, உயிரிழந்த கர்ப்பிணி செம்மலரின் தணிக்கை அறிக்கையில், "28.08.2023 அன்று இதய சிகிச்சை நிபுணரை அழைத்துள்ளதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 28.08.2023 மற்றும் 29.08.2023 ஆகிய தேதிகளில் நோயாளிக்கு ஆஸ்பிரின் மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாக எழுதியிருந்ததை அழித்திருக்கிறார்கள்.

மேலும், 31.08.2023 காலை 7 மணிக்கு BT/ CT ( Bleeding time / Clotting time) எனப்படும் ரத்தம் உறையும் கால விகிதம் குறித்த டெஸ்ட் பதிவு செய்யப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது. 31.08.2023 மாலை 5 மணி முதல் மாலை 5.15 வரை வாந்தி எடுத்ததாகவும், வயிறு வீங்கி காணப்பட்டதாகவும் இறுதியில் உடல் சில்லிட்டும் கை கால் விரைத்தும் காணப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது.

தலைமை மருத்துவருக்கு 31.08.2023 அன்று மாலை 5.45க்கு தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு, கையெழுத்தும் புதிதாக போடப்பட்டுள்ளது. 31.8.2023 மாலை 6 மணிக்கு நோயாளி இறந்த பின்னர், சிகிச்சையின்போது மெக்கானிக்கல் வென்டிலேஷன் வைக்கப்படாமலே வைத்ததாக புதிதாக எழுதப்பட்டுள்ளது. 01.09.2023 ஏழு மற்றும் எட்டு மணிக்கு எழுதப்பட்டுள்ள சிகிச்சை அளித்த குறிப்புகள் உள்ள பக்கம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.

இது போன்று உயிரிழந்த கர்ப்பிணி குப்பியின் தணிக்கை அறிக்கையில், கர்ப்பிணி OG இரண்டாவது யூனிட்டில் 18.07.2023 அன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மட்டுமே இறப்பதற்கு முன் வரை எழுதப்பட்டுள்ளது. HR எனப்படும் இதயத்துடிப்பு எண்ணிக்கையும், சிகிச்சையின்போது அளித்த மருந்துகள் விபரம் மற்றும் ஆய்வுகள் விபரம் இறந்த பிறகே எழுதப்பட்டுள்ளது.

மேலும், எக்கோ எடுத்துள்ள விபரமும் அதே பக்கத்தில் புதிதாக பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் திட்டப்படி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரசவ நிபுண மருத்துவர்கள் சென்று, அங்குள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பற்றிய பிரச்னைகள் குறித்து முகாம் நடத்த வேண்டும். ஆனால், எந்த மருத்துவரும் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து அவ்வாறு அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.

இவ்வாறு தாய்மார்கள் உயிரிழந்த விவகராத்தில் பிரசவ காலத்தில் பணியில் இருந்த மருத்துவர்களையும், பிரசவத்தின்போது இறந்து போனவர்களின் சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கையை உண்மைக்கு மாறாக திருத்தி எழுதியவர்களையும் பணியிடை நீக்கம் செய்யக்கோரி அரசு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தியும், இன்று வரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, தக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு மருத்துவமனை முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த இரு தாய்மார்கள் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் தணிக்கை விபரம் குறித்து ஷோபா, ரத்னகுமார், பழனிக்குமார் ஆகிய மூன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், நகர்ப்புற சுகாதார மைய செவிலியரகள், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஆகியோரிடமும் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்திலும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அரசு மருத்துவர்கள் தரப்பில் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் அத்துமீறி மகப்பேறு சிகிச்சை மையத்துக்குள் வந்து தங்களிடம் வாக்குவாதம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மதுரை மாநகராட்சி நகர்புற சுகாதார மையங்களில் இருந்து அனுப்பப்படும் கர்ப்பிணிகளை கடைசி நேரத்தில் அனுமதிக்கப்படுவதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் இக்கட்டான சூழலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற நிலையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் பற்றாக்குறை இருப்பதாகவும் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.