ETV Bharat / state

சூரிய சக்தி மின்வேலியை அமைக்க கோரும் வழக்கு-தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு

author img

By

Published : Mar 10, 2023, 6:57 PM IST

மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லைப் பகுதிகளில் வன விலங்குகளால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலியை அமைக்க கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள், மான், மிளா மான் என பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் பல விலங்குகள் விவசாய நிலத்திலுள்ள மரங்கள், பயிர்களை சேதப்படுத்துவதுடன் சில நேரங்களில் மனிதர்களையும் தாக்குகின்றன. சமீபத்தில் கரடி தாக்கி இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே போல் தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள் ஆகியவை வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிநவீன மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு போதிய இழப்பீடு தரப்படுவது அவசியம். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் எல்லைப் பகுதிகளில் சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைத்து, விலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க கோரி மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தென்காசி மாவட்டம் கடையம், குற்றாலம், கடையநல்லூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி எல்லைப் பகுதிகளில் சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், தருமபுரி அருகே அண்மையில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பில், "சூரிய மின் சக்தியால் இயங்க கூடிய மின்வேலிகள் அமைப்பது மூலம் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும். மேலும் விலங்குகளுக்கு இதனால் ஆபத்து ஏற்படாது" என வாதாடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர், தமிழ்நாடு முதன்மை தலைமை காப்பாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில், விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் அண்மையில் உயிரிழந்தன. இதுதொடர்பாக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேலி, கிண்டலை தட்டிக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வட மாநிலங்களை மிஞ்சிய கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.