ETV Bharat / state

"புற்றுநோய், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு GH-ல் வலி நிவாரணி சிறப்பு மையம் தேவை" - பதிலளிக்க ஆணை

author img

By

Published : Jan 20, 2023, 6:09 PM IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய், எய்ட்ஸ், நீரழிவு நோயாளிகளுக்காக வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வியியல் துறை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Plea
Plea

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், "2021ஆம் ஆண்டு கட்டடத் தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் கட்டட வேலையின்போது காலில் அடிபட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. பல்வேறு சிகிச்சை செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இறப்பதற்கு முன்பு அவர், தனது காலில் மிகுந்த வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இவரைப் போலவே, புற்றுநோய், ஹெச்ஐவி, நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் தருவாயில் அதிக வலியால் துன்பப்படுகின்றனர். இவர்களுக்கு இறக்கும்போது அதிக வலி ஏற்படாமல் இருக்க பல தனியார் மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன.

இதேபோல் வலி நிவாரணி சிறப்பு மையங்களை அரசு மருத்துவமனைகளில் அமைக்க வேண்டும். குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, இந்த ஐந்து அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.