ETV Bharat / state

சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலு

author img

By

Published : Aug 31, 2022, 6:02 PM IST

சேலம் 8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என கூறியுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திட்டத்தை செயல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு, "கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் அக்டோபர் மாதம் 10-ம் தேதிக்குள் நிறைவு பெறும். உள்கட்டமைப்பு பணிகள் ஜனவரி 30-ம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும். அதற்கு பின்னர் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

அமைச்சர் எ.வ.வேலு

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க கீழக்கரை மற்றும் சின்ன இலந்தைகுளம் ஆகிய இரண்டு இடங்கள் பார்வையிடப்பட்டு உள்ளது. முதல்வர் ஆலோசனையுடன் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும். அரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை பொதுப்பணித்துறை தான் மேற்கொள்ளும். ஆனால் சுற்றுலாத்துறை சார்பில் அதற்கான டெண்டர் அளிக்கப்பட்டு இருந்தது, அந்த காரணத்தால் தான் ரத்து செய்யப்பட்டது. இதில் நிர்வாக குளறுபடிகள் எதுவும் இல்லை" என்றார்

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பதிலளித்தவர், "பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் விவகாரத்தில் மக்கள் பெரும்பான்மையாக சொன்ன கருத்து - நிலத்துக்கு உரிய பணம் தேவை, மாற்று இடம் தர வேண்டும், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தீர்க்க வேண்டும் என்பவை தான்.

அதனடிப்படையில் 3 1/2 மடங்கு இழப்பீடு பணம் மக்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. விமான நிலையம் ஒட்டிய பகுதிகளிலேயே அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படும். மக்கள் குடியிருந்த பழைய வீட்டுக்கு உரிய தொகையும் தருவோம். குடும்பத்தில் உள்ள தகுதி அடிப்படையில் அரசு வேலை.

13 ஊர்களில் ஒரு சில ஊர்களில் மட்டுமே மக்கள் எதிர்க்கிறார்கள். பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் மக்கள் உள்ளார்கள். திட்டம் குறித்து அனைத்து மக்களுக்கும் புரிதலை ஏற்படுத்தி உடன்பட வைப்போம்" என்றார்

8 வழி சாலை கருத்து சர்ச்சை குறித்து பேசியவர், "சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக முதல்வர் ஸ்டாலின் பேசும் போது 8 வழி சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்ய தான் சொன்னார். திமுக இந்த திட்டத்துக்கு எதிரி அல்ல. போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவு படுத்தி தான் ஆக வேண்டும். நிலங்களை எடுத்து தான் ஆக வேண்டும்.

8 வழி சாலை வேண்டும் என எங்கும் நான் பேசவில்லை. ஒன்றிய அரசின் திட்டம் இது. நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்து அதிமுக அரசு பேசவில்லை. அதை செய்ய தான் சட்டமன்றத்தில் சொன்னோம். 8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு. சாலை அமைக்கப்படுமா இல்லையா என அரசு தான் அறிவிக்கும். நான் பேசிய கருத்து தவறாக திரித்து கூறப்பட்டு விட்டது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.