ETV Bharat / state

நில அளவை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை - மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:30 PM IST

Madurai High Court notice: நிலம் அளவை மற்றும் பாதை அமைப்பது சம்பந்தமாக நில உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சோலையம்மாள். இவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எங்கள் பகுதியில் உள்ள மந்திகுளத்தில் என் கணவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குச் செல்வதற்கு வண்டி பாதை உள்ளது. பல ஆண்டுகளாக இந்தப் பாதையை பயன்படுத்தி எங்கள் விவசாய நிலத்திற்குச் சென்று விவசாயம் செய்து வருகிறோம்.

எங்களைப் போல இந்த பகுதியில் 40க்கும் மேற்பட்டவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வண்டி பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதியில் காற்றாலை அமைக்க தனியார் நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வண்டிப் பாதையை அழித்துவிட்டு புதிதாக சாலை அமைப்பது தொடர்பாக இந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சார்பில் நில அளவீடு செய்ய நான் உள்பட 41 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

நல்ல முறையில் இருந்து வரும் வண்டி பாதையை அழித்துவிட்டு காற்றாலை நிறுவனத்திற்கு சாதகமாகவும், காற்றாலை நிறுவன வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும் புதிதாக சாலை அமைப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். எனவே இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நில உரிமையாளர்கள் அனுமதியின்றி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏற்புடையதல்ல. எனவே நில அளவீடு செய்ய வருவாய்த்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டிஸ்க்கு தடை விதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மாவட்ட கல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை.. உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டதன் காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.