ETV Bharat / state

மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - மனுதராருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

author img

By

Published : Feb 13, 2020, 4:47 PM IST

மதுரை: மாணவ - மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன் ரூ.55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை தொடுத்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

high court
high court

நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "நமது நாட்டில் பெரிய தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மத்திய மாநில அரசுகள் கடன்களை வாரி வழங்கியுள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு வரை இதுபோல பெரிய தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளன. அதுவே தற்போது வரை 16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலுவைத் தொகையை அரசியல், அதிகாரம் போன்ற காரணங்களால் வசூல் செய்வதில் வங்கி நிர்வாகங்கள், அரசுகள் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் மாணவ மாணவியர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட்டதில், வெறும் ரூ.55 ஆயிரம் கோடி மட்டுமே நிலுவையாக உள்ளன. இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் சாதாரண பொதுமக்கள் என்பதால், அவர்களிடம் கடன் தொகையை வசூல் செய்வதில் சட்ட விதிமுறைகளை மீறி வங்கி நிர்வாகங்கள் கடுமை காட்டிவருகின்றன.

எனவே, மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்காக வழங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பெரிய மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்காக கடன் பெற்று மீண்டும் திருப்பி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் பட்டியலை, தொலைக்காட்சி, பத்திரிக்கை உள்ளிட்டவற்றில் வெளியிட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரபட்டது என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், நீதிமன்ற நேரத்தை வீண் செய்ததற்காக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: திரையரங்கில் படம் ஓடுவதைப் பொறுத்துதான் வெற்றி நிர்ணயம் - இயக்குநர் வெற்றிமாறன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.