ETV Bharat / state

வயது வரம்பு விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Mar 10, 2021, 6:52 PM IST

மதுரை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்தாண்டு வயது வரம்பு வழங்கப்படாத அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி தாக்கல்செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை செய்திகள்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு வழங்கப்படாத அறிவிப்பை ரத்து செய்ய கோரி வழக்கு

மதுரையைச் சேர்ந்த முத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2098 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவுகளுக்கு ஐந்து ஆண்டுகள் வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான வயது வரம்பில் ஐந்தாண்டு சலுகை வழங்கப்படவில்லை; இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11இல் வெளியிட்ட அறிவிப்பிற்கு இடைக்காலத் தடைவிதித்தும் மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்துசெய்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு தொடர்பா 50 பேரிடம் விசாரணை - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.