ETV Bharat / state

உள்ளாட்சி மன்றங்களுக்கே ஆளும் அதிகாரம் வேண்டும் - தியாகி லட்சுமிகாந்தன் பாரதி

author img

By

Published : Jan 24, 2022, 5:46 PM IST

Updated : Jan 24, 2022, 7:39 PM IST

மக்களை ஆளுகின்ற ஆட்சியை உள்ளாட்சி மன்றங்களிடமே ஒப்படைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தேவையில்லை. முழு ஆட்சி முறைதான் தற்போதைய தேவை. அதுவே காந்தியடிகளின் ஜனநாயகப் பார்வை என்று தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சிறப்பு நேர்காணல்
சிறப்பு நேர்காணல்

மதுரை: காந்தியத்தின் மீது ஆழ்ந்த பற்றும், உள்ளாட்சி மன்றங்களின் மீது பரிவும் கொண்டவர் லட்சுமிகாந்தன் பாரதி (96).

1970-களில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். மேலும் நான்கு மாவட்டங்களில் ஆட்சியராகப் பணி செய்ததுடன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். இவரது தந்தையார் கிருஷ்ணசாமி பாரதி புகழ்பெற்ற வழக்கறிஞர்.

தாயார் லட்சுமி பாரதியும் பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவ்விருவரும் ராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

அதுமட்டுமன்றி, தேசத்தின் விடுதலைக்காக இவரது மொத்த குடும்பமுமே சிறைக்குச் சென்று வரலாறு படைத்தது. லட்சுமிகாந்தன் பாரதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றபோது 1940களில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று தன்னுடைய 16ஆவது வயதிலேயே சிறைக்குச் சென்றவர். தென்காசி மாவட்டத்திலுள்ள நயினார்கரம் என்ற கிராமமே இவர் பிறந்த சிற்றூர்.

சுதந்திரத்தின் மாளிகை

ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்து, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதியை ஈடிவி பாரத் தமிழ்நாடு இணைய ஊடகத்திற்காக சந்தித்தோம்.

அப்போது, மகிழ்ச்சியுடன் நம்முடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், "காந்தியத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அகிம்சை, சத்தியம், உண்மை, சத்தியாகிரகம் ஆகியவைதான் காந்தியமா? காந்தியத்தின் அடித்தளத்தைக் கண்டறிந்தோமேயானால், சுதந்திரத்தின் மாளிகையை நாம் கட்ட முடியும்.

நாட்டு விடுதலையை காந்தியத்தின் அடித்தளமென்றால், எதற்காக அதனைக் கோரினார் என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வெறும் ஆட்சி மாற்றத்தை காந்தியடிகள் விரும்பவில்லை. ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டது. அப்போது லெனின் அங்கிருந்த தனியுடமைகள் அனைத்தையும் நீக்கி, பொதுவுடமையாக்கினார். அதுதான் அடித்தளம்.

லட்சுமிகாந்தன் பாரதி சிறப்பு நேர்காணல்

பிரதிநிதித்துவ ஆட்சி முறை

அப்படியானால் காந்தியடிகள் எதற்காக சுதந்திரம் கோரினார் என்றால், மக்கள் நேரடியாகப் பங்கு பெறுகின்ற ஆட்சிமுறை இந்தியாவில் வேண்டும் என்பதற்குதான். பிரதித்துவ ஜனநாயகமுறையை மாற்றி பங்கேற்பு ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அவரது பார்வையாக இருந்தது.

'அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே' என்பதே காந்தியத்தின் கருத்து. ஆனால், நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், வெள்ளையன் விட்டுச் சென்ற பிரதிநிதித்துவ ஆட்சி முறையையே நாம் பின்பற்றுகிறோம் எனில், நாம் சுதந்திரம் பெற்றதாக எப்படிப் பொருள் கொள்ள முடியும்?

உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரமில்லை

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமமும் சுதந்திரம் பெற்ற குடியரசாக மாற வேண்டும் என்பதே காந்தியடியகளின் கனவு. ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் முழு ஆட்சி பெற்ற குடியரசாகத் திகழ வேண்டும். அது ஒரு தனி நாடு.

அதுதான் ஆட்சி புரியும். அப்படி ஒரு இந்தியாவையே விரும்பினார். ஆனால், தற்போதுள்ள ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளோம் என்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்திற்குட்பட்ட எந்த நிலங்களின் மீதும் உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரமில்லை என்பதுதான் எதார்த்தம்.

ஒரு ஏழைக்குப் பட்டா வழங்க வேண்டுமென்றால், ஒரு பஞ்சாயத்தால் முடியுமா? தவறான ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான அதிகாரம் உண்டா? நிலம் சம்பந்தமான எந்த அதிகாரமும் பஞ்சாயத்துகளுக்கு இல்லை. கிராமங்களோடு எந்தவித தொடர்பும் இல்லாத, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோரிடம்தான் அதிகாரம் உள்ளது.

வெள்ளையர் ஆட்சியில்கூட ஓரளவிற்கேனும் அவர்களின் நிர்வாகத்தோடு கிராமங்களுக்கு தொடர்பினை ஏற்பத்தி வைத்திருந்தார்கள்.

காந்தியவாதிகள் முன்வர வேண்டும்

அந்த நிலங்களுக்குத் தேவையான குளம், குட்டைகள், நீர்வரத்துகள் மீதும் கூட உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரமில்லை. மடைக்கு லஷ்கரை நியமிக்கும் அதிகாரம்கூட பஞ்சாயத்துகளுக்கு இல்லை. அரசு போடுகின்ற எந்தத் திட்டங்களிலாவது பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமிருக்கிறதா? முதியவர்களுக்கு உதவித்தொகை கூட பஞ்சாயத்துகளால் வழங்கமுடியாது.

பிறகு எப்படி காந்தியின் கனவு சுதந்திர இந்தியாவில் நனவாகியிருக்க முடியும்? காந்தியடிகள் கண்ட அந்த லட்சியக் கனவை நடைமுறை சாத்தியமாக்குவதற்கு காந்தியவாதிகள் அனைவரும் முன் வர வேண்டும். ஆங்காங்கே காந்தியவாதிகள் தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதையும் இங்கே செய்யாமல் இருந்திருந்தால் காந்தியை மக்கள் மறந்திருப்பார்கள்.

பஞ்சாயத்து தலைவர்தான் முதலமைச்சர்

ஆகையால் தற்போதைய சூழலில் கிராமங்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், ஆட்சியையே ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தை முன் வைத்து அனைத்து காந்தியவாதிகளும் தொடர்பு பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களைச் சந்தித்து, ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று தீர்மானம் இயற்ற வலியுறுத்த வேண்டும். மக்களின் இந்த உணர்வுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்த்தே ஆக வேண்டும்.

பஞ்சாயத்துகளில் உள்ள கிராம சபைதான் எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து தலைவர்தான் முதலமைச்சர். எனவே, காந்தியடிகளால் முன்மொழியப்பட்ட இந்த ஆட்சிமுறையில் சட்டப்பேரவையில் சட்ட, திட்டங்களை இயற்றலாம்.

பள்ளிப்பாடங்கள் குறித்து கல்வித்துறை முடிவு செய்தால், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் நடத்துகின்ற அதிகாரம் ஊராட்சி மன்றங்களுக்கே வேண்டும். வேளாண்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளலாம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் ஊராட்சிமன்றங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

Last Updated : Jan 24, 2022, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.