ETV Bharat / state

கூடுதல் விலையா? சட்டப்படி நடவடிக்கை..! லியோ ரிலீஸ் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:25 PM IST

லியோ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்ததை விட அதிக விலையில் டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்து உள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

மதுரை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து உள்ள "லியோ" படம், இம்மாதம் 19ஆம் தேதி உலகெமங்கும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் "லியோ" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் "லியோ" திரைப்படம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "மதுரை மாவட்டத்தில் லியோ படம் திரையிடப்படும் திரையரங்குகளில், சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்ட 6 நாட்களுக்கு மட்டும், நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது.

திரைப்படத்தை மேற்கண்ட தினங்களில் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கும் (5 காட்சிகள்) முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட வேண்டும். 'லியோ' திரைப்படத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும், இதற்கான சிறப்பு கண்காணிப்பு குழு திரையரங்குகளை கண்காணிக்க வேண்டும்.

இதேபோன்று 'லியோ' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்லவும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் சரியான பாதை, வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும். மேலும் அரசு நிர்ணயம் செய்துள்ள திரையரங்க டிக்கெட் கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும்.

'லியோ' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தமிழ்நாடு திரையரங்குகள் (ஓழுங்குமுறை) சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லியோ திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் ஏற்படும் மீறல்கள் குறித்து பொதுமக்கள் 99949 09000 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: லியோ பட வெளியீடு; அரசின் கட்டுப்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.