ETV Bharat / state

'தாய் மொழியை ஊக்குவிக்கும் திட்டம் தான் தேசிய கல்விகொள்கை திட்டம்' - எல். முருகன்

author img

By

Published : Jul 13, 2022, 9:57 PM IST

தாய் மொழியை ஊக்குவிக்கும் திட்டம் தான் தேசிய கல்விகொள்கை திட்டம் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய எல். முருகன்
பட்டமளிப்பு விழாவில் பேசிய எல். முருகன்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மு.வரதராசனார் அரங்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் கழக நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “மதுரையில் குரு பூர்ணிமா நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சக்தி வாய்ந்த தமிழர்கள் உலக முழுவதிலும் ஆட்சி செய்து வருகிறார்கள். கூகுள் சுந்தர் பிச்சை, சிவநாடார், விஷ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பெருமை சேர்த்து வருகின்றனர்.

தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி, ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறி பேச்சை தொடங்கியவர் மோடி. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்தவர் மோடி. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழ்மொழி பெருமையை பரப்பி வருகிறார்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய எல். முருகன்

தற்போதைய இளைஞர் சமூகம் இந்தியாவை ஆளும் சமூகமாக உலகளவில் செல்லக்கூடியவர்களாக மாறுவார்கள், வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். கரோனா சவாலை கடந்து இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 200 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

உக்ரைன் போரின்போது அங்கிருந்த ஆப்ரேசன் கங்கா மூலமாக 23 ஆயிரம் மாணவர்களை இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவந்தது என்ற பெருமிதம் உள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் தொழில்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

75ஆவது சுதந்திர ஆண்டில் யோகா கலையை உலக முழுவதும் எடுத்துசென்றுள்ளோம். நாம் இந்தியனாக, தமிழனாக உலகையே ஆண்டுகொண்டுள்ளோம். 100ஆவது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. உலக முழுவதுமாக விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். மாவட்டம் தோறும் விளையாட்டு திடல் அமைப்பது என்பது பிரதமரின் கனவு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விகொள்கை முறையில் தான் தாய் மொழியில் நம்முடைய கருத்துகளை படிக்க முடியும். தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கதான் தேசிய கல்விக்கொள்கை திட்டம் உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘எட்டப்பர்களை வைத்து வீழ்த்தி விடலாம் என நினைக்காதீர்கள் ஸ்டாலின்’! - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.