ETV Bharat / state

ஏற்றுமதி போக்குவரத்து மீதான ஜிஎஸ்டி விலக்கை நீட்டிப்பு செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

author img

By

Published : Oct 4, 2022, 8:35 AM IST

ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஏற்றுமதி போக்குவரத்து மீதான ஜிஎஸ்டி விலக்கை நீட்டிப்பு செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ஏற்றுமதி போக்குவரத்து மீதான ஜிஎஸ்டி விலக்கை நீட்டிப்பு செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

மதுரை: இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவிலிருந்து கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக் கட்டணம் மீதான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) விலக்கை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி, அதனை இரண்டு முறை நீட்டித்தது.

அவ்வாறான கடைசி நீட்டிப்பு 2022 செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்துள்ளது. 01.10.2022 முதல் இந்த விலக்கு நீட்டிக்கப்படாததால், கப்பல் மார்க்க ஏற்றுமதி சரக்குகளுக்கான போக்குவரத்துக் கட்டணம் மீது 5 சதவிகித ஜிஎஸ்டியும், விமான மார்க்க ஏற்றுமதி சரக்குகளுக்கான கட்டணம் மீது 18 சதவிகித ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். இதனால் பொருட்களுக்கான செலவுகள் அதிகரித்து, ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் பிற நாடுகளுடன் விலையில் போட்டியிட மிகவும் கஷ்டப்படுவர்.

ஏற்றுமதி வணிகமும் பெரிதும் பாதிப்படையும். மேலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.9 சதவிகிதம் என தற்போது உயர்த்தியுள்ளதால், வணிகக் கடன்கள் மீதான வட்டி அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதி சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் ஏற்றுமதியாளர்கள் செலுத்த வேண்டியுள்ளதால், தொழில், வணிக பணப்புழக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும்.

மேலும் இது விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதியையும் வெகுவாகப் பாதிக்கும். எளிதில் அழுகக்கூடிய விளை பொருட்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் ஆகியவை நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது, பல சந்தர்ப்பங்களில் விமான சரக்குப் போக்குவரத்துக் கட்டணம், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்றுமதியாளர்கள் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியையும் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

சர்வதேச சந்தைகளில் காணப்படும் அரசியல் பதட்டங்கள், உலக வர்த்தக விநியோக பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் நம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதமும் தற்போது குறைந்துள்ளது. கோவிட் தொற்று நோய்க்குப் பின்னர், சர்வதேச சந்தையில் அனைத்து இறக்குமதியாளர்களும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை செலுத்த 3 மாதம், 6 மாதம் என கால அவகாசம் கேட்கும் நிலையில், ஏற்றுமதியாளர்கள் தொழில் முதலீடுகளை மிகவும் சிரமத்திற்கிடையே அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வணிகத்தில் தொடர்ந்து செயல்படவும், பிற நாடுகளுடன் போட்டியிட்டு பொருட்களை சந்தைப்படுத்தவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஏற்றுமதி சரக்குப் போக்குவரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாட்டின் அந்நிய செலாவணியும் குறையும்.

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தபட்சம் ஒரு பொருளின் ஏற்றுமதியை அடையாளம் கண்டு, அதன் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களில் பணப்புழக்கத்திற்கு தடை ஏற்படும் வகையில், சரக்குப் போக்குவரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரியை செலுத்த ஏற்றுமதியாளர்களை நிர்பந்திக்கிறது.

ஏற்றுமதி மற்றும் அதன் தொடர்பான சேவைகளுக்கு உலகில் வேறு எங்கும் ஜிஎஸ்டி வரி கிடையாது. எனவே சர்வதேச நாடுகளில் ஏற்றுமதி மற்றும் அதன் தொடர்பான சேவைகளுக்கு GST வரி விலக்களிக்கப்பட்டுள்ளது போன்று, நம் நாட்டிலும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியிலிருந்து ஏற்றுமதி மற்றும் அதன் தொடர்பான சேவைகளுக்கு விலக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெட் கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.